ஜெர்மனியில் கூட இத்தனை பென்ஸ் கார்கள் விற்பனையாகாது!! இந்தியா ஏழை நாடே கிடையாதுங்க!
உலகளவில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் சொகுசு கார்கள் விற்பனையில், இதுவரையில் இல்லாத புதிய சாதனையை படைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி விரிவாக பார்க்கலாம்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், வாழ்க்கையில் எந்த காரை வாங்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டால், நம்மில் பலரது பதில் மெர்சிடிஸ்-பென்ஸ் காராகவே இருக்கும். அந்த அளவிற்கு, பென்ஸ் கார்கள் மீதான மோகம் நமக்குள் இருக்கிறது.

குறிப்பாக, இந்தியாவில் விலையுயர்ந்த கார்கள் என்றாலே பென்ஸ் கார்கள் தான் என எண்ணுவோர் இப்போதும் இருக்க தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 6 மாதங்களில், அதாவது 2023 ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் சுமார் 8,528 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
காலண்டர் வருடத்தின் துவக்கத்திலேயே பெரும்பாலானோர் புதிய கார்களை வாங்க விரும்புவர். அதிலிலும் குறிப்பாக, மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற சொகுசு கார்களை வாங்கும் செல்வந்தர்கள் வருடத்தின் துவக்கத்தில் பிராண்ட்-நியூ காரை புக் செய்யவே விருப்பப்படுவர். இதனால், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விற்பனையும் வருட துவக்கத்தில் அதிகமாக பதிவாகும். இந்த 2023ஆம் வருடத்திலும் அவ்வாறுதான் நடந்துள்ளது.

ஆனால் இந்த வருடத்தில், 2ஆம் காலாண்டிலும் (2023 ஏப்ரல் - ஜூன்) மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள், 3 மாதங்களில் 3,500க்கும் அதிகமான மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் புக் ஆன நிலையில், இந்த 3 மாதங்களில் 3,831 பென்ஸ் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த 2022இல் இதே ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையே பதிவான விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 8% அதிகம் ஆகும். இத்தனைக்கும், மெர்சிடிஸ்-பென்ஸின் மிக பெரிய பலமே அதன் ஜிஎல்சி எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த லக்சரி காரை வாங்கவே ஓர் தனிக்கூட்டம் உள்ளது. ஆனால் இந்த லக்சரி எஸ்யூவி கார் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் விற்பனையில் இல்லை.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் ஜி.எல்.சி கார் இந்த ஜூலை மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. ஆனால் ஏற்கனவே, எலக்ட்ரிக் கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றன என்பதை கூறியே ஆக வேண்டும்.
கடந்த 6 மாதங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்த 8,528 கார்களில் சுமார் 2,000க்கும் அதிகமானவை எலக்ட்ரிக் கார்களாகும். மெர்சிடிஸ் நிறுவனம் இ.க்யூ.பி, இ.க்யூ.சி மற்றும் இ.க்யூ.எஸ் என்ற இரு எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்கிறது. ரூ.1.5 கோடிக்கு மேல் விலை கொண்ட இந்த எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் டபுள் மடங்கு அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் லக்சரி கார்கள் விற்பனையில் ராஜா என்பதை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய சாதனைகளை படைத்து வருவது அந்த பிராண்டிற்கு மட்டுமல்லாமல், பசுமையான போக்குவரத்தை தேடும் நமது மத்திய அரசுக்கும் ஓர் நல்ல செய்தியாகும்.


Click it and Unblock the Notifications









