இலட்ச ரூபாய்களில் விலை உயருது!! பென்ஸ் கார்களை வாங்குறது கனவாவே போய்டும் போலயே!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் சொகுசு கார்களின் விலைகளை வருகிற 2024 ஜனவரி 1 முதல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகும். ஜெர்மனியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான மெர்சிடிஸ் வழக்கம்போல், வருகிற 2024ஆம் வருடத்தையும் விலை அதிகரிப்புகளுடன் துவங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, வருகிற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில மெர்சிடிஸ் கார்களின் விலைகள் 2% அதிகரிக்கப்பட உள்ளன. இதில், 'குறிப்பிட்ட சில' என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஏனெனில், அனைத்து கார்களின் விலைகளையும் மெர்சிடிஸ் நிறுவனம் 2% அதிகரிக்க போவதில்லை. மெர்சிடிஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வளவு விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
மற்றப்படி, எந்தெந்த மெர்சிடிஸ் கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன என்பது குறித்த விபரங்கள் இல்லை. மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின்படி பார்க்கும்போது, மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.6 லட்சம் வரையிலும், இந்தியாவில் விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரான மேபக் எஸ் 680-இன் விலை ரூ.3.4 லட்சம் வரையிலும் அதிகரிக்கப்படலாம்.

புதிய 2024ஆம் வருடத்தை மெர்சிடிஸ் மட்டுமின்றி, இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதி சுஸுகி, ஹூண்டாயில் இருந்து ஆடி வரையில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் தான் வரவேற்க உள்ளன. மற்ற நிறுவனங்களை போன்று, மெர்சிடிஸ் நிறுவனமும் கார் உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவை இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக சுட்டிக்காட்டி உள்ளது.
விலை திருத்தம் என்கிற பெயரில் இந்த விலை உயர்வை கொண்டுவரும் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அதிகரித்துவரும் உள்ளீடு செலவுகள், பொருட்களின் விலைகள் மற்றும் அதிக பணவீக்க அழுத்தங்களால் ஏற்படும் செலவுகள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

இவை, மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தை அதன் சில மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை அதிகரிக்க தூண்டியுள்ளன. இதன் மூலம், செலவுகளில் சிலவற்றை ஈடுசெய்து நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் கூட்டாளர்களுக்கு லாபகரமான வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளும். உண்டாகும் செலவுகளில் பெரும்பான்மையான பகுதியை நிறுவனம் தக்க வைத்து, சில பகுதி மட்டுமே சந்தை வழியாக செல்லவுள்ளது" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது மெர்சிடிஸ் நிறுவனம் கூறுவது என்னவென்றால், தங்களுக்கு ஏற்படும் செலவுகளில் பெரும்பான்மையான பகுதியை நாங்களே சமாளித்துக் கொள்கிறோம், சிறிய பகுதியை மட்டுமே வாடிக்கையாளர்களின் தலையில் கட்டுகிறோம் என்பதாகும். இவ்வாறு கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போதிலும், வாடிக்கையாளர்களை எளிதாக கார் உரிமையாளர் ஆக்கும் ஃபைனான்ஸ் சர்வீஸ்களை மெர்சிடிஸ் தொடர்ந்து வழங்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை அதிகரிப்பு எல்லா துறைகளிலும் சாதாரணமான ஒன்றுதான். இதில் ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா...! விலை அதிகரிப்பு என்பது இருமுனை கத்தி போன்றது. விலை அதிகரிப்பை சரியான அளவில், வணிகத்தை பாதிக்காதவாறு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், மொத்த வணிகமும் மொத்தமாக படுப்பதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









