கப்பல்ல போகிற மாதிரியான அனுபவம் வேண்டுமா?.. இந்த காருல அது ரொம்ப தாராளமாவே கிடைக்கும்! நிறுவனத்தோட 3வது இ-கார்
சொகுசு கப்பல் போன்ற ஓர் காரை லக்சூரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அது என்ன கார்? அதன் விலைகள் என்ன? மற்றும் அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடம்பர வகை கப்பல்களுக்கு டஃப் கொடுக்கக் கூடிய அதி நவீன வசதிகள் மற்றும் லக்சூரி அம்சங்களைக் கொண்ட கார் மாடல் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அது விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

ஏற்கனவே நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மேலும் ஓர், அதாவது, மூன்றாவது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதிதாக இக்யூஇ எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.39 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மெர்சிடிஸ் இக்யூஎஸ் லிமோசைன் ரக எலெக்ட்ரிக் கார் மற்றும் இக்யூபி எஸ்யூவி ரக கார் ஆகிய இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே நம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையிலேயே மூன்றாவதாக எலெக்ட்ரிக் கார் மாடலாக இக்யூஇ மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த இக்யூஇ எலெக்ட்ரிக் கார் இக்யூஎஸ் லிமோசைன் காட்டிலும் குறைவான விலையையும், இக்யூபி-யைக் காட்டிலும் அதிக விலையையும் கொண்டதாக இருக்கின்றது.
இக்யூஎஸ் லிமோசைனின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 1 கோடியே 59 லட்சம் ஆகும். அதேவேளையில், இக்யூபி மாடலின் விலை ரூ. 77.50 லட்சமாக உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் இக்யூஇ எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 521 கிமீ வரை ரேஞ்ஜ் தரும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 90.6 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. உலக சந்தையில் இக்யூஇ எலெக்ட்ரிக் பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் இக்யூஇ மாடலின் 500 4மேட்டிக் எனும் ஒற்றை ட்ரிம் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
இந்த தேர்வில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முன் ஆக்ஸில் மற்றும் பின் ஆக்ஸில் ஆகியவற்றிலேயே அவை நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் 408 பிஎச்பி பவர் மற்றும் 858 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக சந்தையில் இதே எலெக்ட்ரிக் கார் இக்யூஇ 350 பிளஸ், இக்யூஇ 350 4 மேட்டிக் உள்ளிட்ட தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரேஞ்ஜ் திறனில் மட்டுமில்லைங்க சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதிலும் மிக சிறந்த தயாரிப்பாக தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இக்யூஇ 500 4மேட்டிக் இருக்கின்றது. 1,410 மிமீ அகலமான திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரையே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான திரை ஆகியவையாக செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, 25 அங்குல ஹெட்-அப் திரை, மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்ம்ஸ்டர் 3டி சரவுண்ட் சிஸ்டம், ஹெப்பா ஃபில்டர், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் என ஏகப்பட்ட அம்சங்கள் புதிய இக்யூஇ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், பாதுகாப்பு வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்சி, டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட், 360 டிகிரி பார்வைத் திறன் கொண்ட கேமிரா, லேன் கீப் அசிஸ்ட், அவசர கால தானியங்கி பிரேக், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே சொகுசு எலெக்ட்ரிக் கார் விரும்பிகளைக் கவரும் பொருட்டு மெர்சிடிஸ் பென்ஸ் புதிய இக்யூஇ எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









