இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடா எல்லாம் இதுக்கு முன்னாடி கை கட்டிதான் நிக்கணும்!
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜி மோட்டார் (MG Motor) திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே (Price) 23 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலையே 27 லட்ச ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ் ஷோரூம் விலைதான். எனவே இந்த எலெக்ட்ரிக் காரை அனைவராலும் வாங்க முடியாது. இதன் காரணமாக மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது.

எம்ஜி ஏர் இவி (MG Air EV) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதுதான் இந்த எதிர்பார்ப்புகளுக்கு முக்கியமான காரணம். இது சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள வுல்லிங் ஏர் இவி (Wulling Air EV) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவிலேயே எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் இந்திய சாலைகளில் எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் அறிமுகம் நெருங்கி கொண்டே வருவதை இது உணர்த்துகிறது. சமீபத்தில் சாலைகளில் தென்பட்ட எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார், கிட்டத்தட்ட தயாரிப்பு நிலைக்கு உகந்ததாக இருந்தது.

எனவே வரும் மாதங்களில் எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் முன் பகுதியில் எல்இடி லைட் பார் வழங்கப்படலாம். இது முன் பகுதியின் அகலம் முழுமைக்கும் நீண்டிருக்கலாம். அதற்கு கீழாக மைய பகுதியில் சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்படலாம் என தெரிகிறது. அதே சமயம் இந்த காரின் உட்பகுதியில் 2 திரைகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஏசி வெண்ட்கள் 'ஸ்லிம்' ஆக இருக்கலாம் எனவும், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்திறனை பொறுத்தவரையில், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவை 17.3 kWh மற்றும் 26.7 kWh பேட்டரிகள் ஆகும். இதில் 17.3 kWh பேட்டரியை ஒரு முறை நிரப்பினால் 200 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. மறுபக்கம் 26.7 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 300 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ரேஞ்ச் (Range) உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு உள்ளேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் காரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








