எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரை இவ்வளவு குறைவான விலையில் வாங்கலாமா? வசதிகள் எதை எதை இழக்க வேண்டியிருக்கும்?
எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அதன் குறைந்த விலையினால் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை பேஸ் வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் கார்கள் பல்வேறு பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் அவற்றுள் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி பிராண்ட்களே ஆகும். டாடா மோட்டார்ஸ் மட்டுமே குறைந்த விலையில் எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வந்த நிலையில், டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் குறைந்த விலையில் கோமெட் எலக்ட்ரிக் காரை சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் 2வது எலக்ட்ரிக் காரான கோமெட் தான் தற்போதைக்கு இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆகும். ரூ.7.98 லட்சத்தில் இருந்து விலைகளை கொண்ட எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரானது இந்தோனிஷியாவில் விற்பனையில் உள்ள வுல்லிங் ஏர் இவி-இன் அடிப்படையிலானது. அதாவது, எம்ஜி கோமெட் மற்றும் வுல்லிங் ஏர் இவி இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தீர்களேயானால், கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாகவே இருக்கும்.
இவ்வாறு வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட எம்ஜி மோமெட் எலக்ட்ரிக் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட், அதாவது ரூ.7.98 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் வேரியண்ட் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பது நமக்கு காருக்குள் இருக்கும் போதுதான் பளிச்சென்று தெரிகிறது. ஏனெனில் காருக்குள் நிறைய அம்சங்கள் இல்லை.

குறிப்பாக, டேஸ்போர்டில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை இல்லாதது நமக்கு பெரிய குறையாக தெரிகிறது. இருப்பினும் ப்ளூடூத் இணைப்பு வசதியையும், ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல் பொத்தான்களையும் காண முடிகிறது. டேஸ்போர்டில் ஒரேயொரு சிறிய திரை மட்டும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக உள்ளது. இதன் வாயிலாக ப்ளூடூத் இணைப்பு குறித்த விஷயங்களை செய்து கொள்ளலாம்.
காரின் உற்பத்தி செலவை குறைக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த காரில் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம் காரை சுற்றிலும் வழங்கப்படும் விளக்குகள் ஆகும். காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஹெட்லைட்களும், டர்ன் இண்டிகேட்டர்களும் பழைய கார்களில் வழங்கப்படுவதை போன்று ஹலோஜன் தரத்தில் உள்ளன. மாடர்ன் எல்இடி தரத்தில் இல்லை.

காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரம் எளிமையாக லெதரால் மூடப்பட்டுள்ளது. சாவியை செலுத்தாமல் காருக்குள் நுழையும் வசதியில் எம்ஜி கை வைக்கவில்லை, நல்லவேளையாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒளிரும் எம்ஜி லோகோக்களையும் காரில் பார்க்க முடிகிறது. எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரை பீச் பே, செரெனிட்டி, சண்டவுனர் மற்றும் ஃப்ளக்ஸ் என்ற 4 பெயிண்ட் தேர்வுகளுள் ஒன்றில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: காரின் விலையை குறைக்க வேண்டும், அதேநேரம் முக்கிய வசதிகள் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து மிகவும் கவனத்துடன் கோமெட் எலக்ட்ரிக் காரின் இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை எம்ஜி மோட்டார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இருப்பினும் முடிந்தவரையில், சற்று கூடுதல் விலையில் எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் காரை வாங்குங்கள் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications









