பென்ஸ் காருக்கே டஃப் கொடுக்கும் வசதி கொண்ட குட்டி இ-காருக்கு புக்கிங் தொடங்கியது! முன்தொகை 11,000 ரூபா மட்டுமே
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விரைவில் அக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிறுவனம் அறிவித்தபடியே கோமெட் இவிக்கான புக்கிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நாட்டில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV)-யும் ஒன்று. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி (Tata Tiago EV)க்கு போட்டியாக இதனை எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

சென்ற மே மாதம் 5 ஆம் தேதி அன்றே எலெக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளையும் அது அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கின்றது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி 12 மணி அளவில் இருந்து புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பலகட்ட சிறப்பு அறிவிப்புகளை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அந்தவகையில், 8 ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி பேட்டரி பேக்கிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, வாகனத்திற்கான கூட்டப்பட்ட வாரண்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜை ரூ. 5 ஆயிரம் என்கிற ஆரம்ப தொகையிலேயே வழங்க இருப்பதாகவும் அது அறிவித்து உள்ளது. மேலும், முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 7.98 லட்ச ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் எம்ஜி கோமெட் இவி விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.
இது பேஸ் (Pace) வேரியண்டின் விலை ஆகும். இதுதவிர பிளே (Play) மற்றும் ப்ளஷ் (Plush) எனும் வேரியண்டுகளிலும் கோமெட் இவி விற்பனைக்குக் கிடைக்கும். இதில் பிளே வேரியண்டிற்கு ரூ. 9.28 லட்சமும், பிளஷ் வேரியண்டிற்கு ரூ. 9.98 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதுவும் ஆஃபர் விலைகளே ஆகும். புக்கிங்கைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்ய எம்ஜி திட்டமிட்டுள்ளது. டெலிவரி பணிகளும் இந்த மாதத்தில் இருந்தே தொடங்கப்பட இருக்கின்றது. இநத் காரில் 17.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும். இந்த பேட்டரி பேக்குடன் சேர்த்து 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

எம்ஜி கோமெட் இவி விலை குறைவான குட்டியான காராக இருந்தாலும் அதில் தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இடம் பெற்றிருப்பதை போல இரண்டு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். ஒவ்வொன்றும் 10.25 அங்குலம் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒன்று தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் செயல்படும். இதுதவிர, சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமிரா, டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்டவையும் எம்ஜி கோமெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த கார் டாடா டியாகோ இவிக்கு மிக சிறந்த போட்டியாளனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலமடங்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், நல்ல விற்பனையை இந்தியாவில் கோமெட் இவி பெறும் என எதிர்பார்கப்படுகின்றது. இதன் விலையும் குறைவு என்பதால் மக்கள் நல்ல வரவேற்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications









