MG Comet EV விலை கம்மி... ஆனால் உள்ளேயும் ஸ்டைலானது!! என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்?
கோமெட் (Comet) எலக்ட்ரிக் காருக்கு உள்ளே என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை படத்துடன் எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றையும், இந்தியாவில் எம்ஜியின் இந்த புதிய விலை குறைவான எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.
உலகமே எலக்ட்ரிக்கையும், டிஜிட்டலையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா... இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாக எப்போதோ ஆரம்பித்துவிட்டன. இருப்பினும் எரிபொருள் என்ஜின் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் அவற்றின் எண்ணிக்கை இப்போதும் குறைவாக உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டும், பசுமையான சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டும் எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் கோமெட் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இசட்.எஸ் இவி -க்கு அடுத்து இந்தியாவில் எம்ஜியின் 2வது எலக்ட்ரிக் காராக கோமெட் இவி விளங்க உள்ளது. ஆனால் இசட்.எஸ் இவி -ஐ காட்டிலும் கோமெட்டின் மீது எம்ஜி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. ஏனெனில் இசட்.எஸ் இவி சற்று விலைமிக்க எலக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கோமெட் இவி ஆனது மக்கள் பலரால் வாங்க இயலும் வகையில் விலை குறைவான எலக்ட்ரிக் காராக கொண்டுவரப்படுகிறது.
இதற்கிடையில்தான் தற்போது, கோமெட் இவியின் உட்புற டேஸ்போர்டின் தோற்றத்தை படத்தின் மூலமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளிக்காட்டி உள்ளது. காரின் அளவு சிறியது என்பதால், டேஸ்போர்டை முடிந்த வரையில் எம்ஜி நிறுவனம் சிறியதாக, மாடர்ன் டிசைனில் வழங்கியுள்ளது. ஆனால் அதேநேரம் ஓட்டுனருக்கு விபரங்களை வழங்கும் திரை மற்றும் பொழுதுப்போக்கிற்கான திரையில் எந்த குறையும் இல்லை. குறிப்பாக, டேஸ்போர்டின் டிசைன் எதிர்கால எலக்ட்ரிக் கார்களுக்கான டேஸ்போர்டு போன்று காட்சியளிக்கிறது.

இதற்கேற்ப அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப வசதிகள், தேவையான கண்ட்ரோல்கள் மற்றும் தடையில்லா இணைய வசதி உள்ளிட்டவை இந்த புதிய எலக்ட்ரிக் காரில் இருக்கும் என எம்ஜி நிறுவனம் அழுத்தி கூறுகிறது. வளைந்தாற் போன்று இருக்கும் டேஸ்போர்டில் திரைகள் நிமிர்ந்து நிற்கின்றன. டேஸ்போர்டில் இரு திரைகள் ஒவ்வொன்றும் 10.25 இன்ச் அளவில் உள்ளன. பொழுதுப்போக்கு திரையில் அம்சங்களை உரிமையாளரே தேவைக்கேற்ப மாற்றி கொள்ளலாம் என எம்ஜி தெரிவித்துள்ளது.
இந்த திரையின் வழியாக பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களையும், பயணத்திற்கான வழிக்காட்டுதல்களையும் பெறலாம் என்றும், இதன் மூலமாக கோமெட்டில் மகிழ்ச்சியான பயணம் கிடைக்கும் என்றும் எம்ஜி நிறுவனம் கூறுகிறது. இந்த டச் ஸ்க்ரீன் உடன் ஏற்கனவே கூறியதுபோல், ஏகப்பட்ட கண்ட்ரோல்களையும், வாய்ஸ் கண்ட்ரோலையும் இந்த எலக்ட்ரிக் காரில் பெறலாம். இதனால் சாலையில் இருந்து ஓட்டுனர் தனது பார்வையை எடுக்க வேண்டிய தேவை இருக்காது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இவ்வாறான தொழிற்நுட்ப அம்சங்களை தனது கார்களில் வழங்குவதில் முனைப்பு காட்டக்கூடியது என்பதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். இந்தியாவில் எம்ஜியின் முதல் காரான ஹெக்டர், இந்தியாவின் முதல் இண்டர்நெட் எஸ்யூவியாக அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி அஸ்டர் பல புதிய மாடர்ன் வசதிகளை பெற்றுவந்துள்ளது. அவற்றை தொடர்ந்து எம்ஜி கோமெட் இவியும் தொழிற்நுட்ப அம்சங்களில் புதிய பெஞ்ச் மார்க்கை ஏற்படுத்த உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
விலை குறைவான எலக்ட்ரிக் காராக வருவதால் ஏற்கனவே எம்ஜி கோமெட் இவி மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அப்படி இருக்கையில், இந்த காரில் மாடர்ன் தோற்றத்தில் டேஸ்போர்டு வழங்கப்பட உள்ளதாக தற்போது படத்துடன் தெரிவிக்கப்பட்டு இருப்பது, இந்த கார் மீதான ஆவலை மேலும் கூட்டியுள்ளது. எம்ஜி கோமெட் இவி, நகர்புற போக்குவரத்துக்கு உகந்த காராக இருக்கும்.


Click it and Unblock the Notifications









