1,000 கிமீ போறதுக்கு 500 ரூபாதான் செலவு ஆகுமா! இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) இன்று (ஏப்ரல் 26) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 2வது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
முன்னதாக எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என்ற எலெக்ட்ரிக் காரை, அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை (Price) மிகவும் அதிகமாக இருந்து வரும் சூழலில், எம்ஜி கோமெட் இவி யாருமே எதிர்பார்க்காத வகையில், மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.98 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே வரும் மாதங்களில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களை கேட்டால், இந்த விலைக்கு இப்படி ஒரு காரா! என ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் உள்ளே 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இந்த 2 திரைகளுமே தலா 10.25 இன்ச் அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்த எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் (Features), கீலெஸ் எண்ட்ரி மற்றும் 3 யூஎஸ்பி போர்ட்கள் ஆகிய அம்சங்களும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் அளவில் சிறியதாக இருந்தாலும், பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) பஞ்சமில்லை.
இதன்படி எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு வசதிகளையும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

அதே சமயம் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் 17.3 kWh பேட்டரி (Battery) தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 3.3 kW சார்ஜர் (Charger) வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் என முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 7 மணி நேரம் எடுத்து கொள்ளும். ஆனால் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு 5 மணி நேரம் மட்டுமே ஆகும்.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விலை குறைவு என்பதுடன், அதனை இயக்குவதற்கும் குறைவான செலவே ஆகும். அதாவது இந்த எலெக்ட்ரிக் காரை 1,000 கிலோ மீட்டர்கள் ஓட்டுவதற்கு வெறும் 519 ரூபாய் மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சார்ஜ் செய்வதற்கான தொகை (Charging Cost) ஆகும்.
பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களை 1,000 கிலோ மீட்டர் இயக்குவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது, இது பல மடங்கு குறைவாகும். அதே நேரத்தில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 42 ஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம், சக்தியை பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், எம்ஜி கோமெட் இவி, சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அளவில் சிறியதாக இருந்தாலும், காரின் உள்ளே இடவசதி தாராளமாகவே இருக்கிறது. எனவே உங்கள் பயணம் சௌகரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை நாளை (ஏப்ரல் 27) முதல் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்க்கலாம். அதே நேரத்தில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் மே 15ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. அதை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகளும் மே மாதத்தில் இருந்தே தொடங்கப்படவுள்ளன.
இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் கார் மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களுடன், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இதில், டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
அதே சமயம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.50 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.43 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். போட்டி மாடல்களுடன் (Rivals) ஒப்பிடும்போது, குறைவான விலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு எம்ஜி கோமெட் இவி சிறந்த ஆப்ஷனாக இருக்கும். உண்மையிலேயே வெறும் 7.98 லட்ச ரூபாய்க்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்புதான். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருப்பதும், அதிநவீன வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்கள்!


Click it and Unblock the Notifications









