பார்க்க தான் சின்னது... தீயணைப்பு வாகனமா கூட பயன்படுத்தலாம் போலயே!! இந்த எலக்ட்ரிக் காரை போலீஸாரும் வாங்கனும்!
இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் கார் போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனமாக பயன்படுத்துவதற்கு எப்படி இருக்கும் என்று எப்போவாவது யோசித்து உள்ளீர்களா? இப்படித்தான் இருக்கும் என கூறுவது போல் இந்தோனிஷியா நாட்டில் ஒரு எலக்ட்ரிக் கார் அறிமுகமாகி உள்ளது.
இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராகவும், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 2வது எலக்ட்ரிக் காராகவும் கோமெட் இவி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்டகம் போன்றதான உடலமைப்பில் விற்பனைக்கு வந்த இந்த காரின் விற்பனை இந்தியாவில் எந்த அளவிற்கு இருக்கும் என்பது போக, போக தான் தெரியவரும். எம்ஜி கோமெட் ஆனது சீன நிறுவனமான வுல்லிங்கின் ஏர் இவி எலக்ட்ரிக் காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் ஆகும்.

ரீ-பேட்ஜ்டு வெர்சன் என்று கூட சொல்ல முடியாது. சில, சில மாற்றங்களை மட்டுமே செய்து எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது, அவ்வளவுதான். சீனா மட்டுமின்றி, இந்தோனிஷியாவிலும் வுல்லிங் ஏர் இவி என்ற பெயரிலேயே இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்தோனிஷியாவில் வுல்லிங் ஏர் இவி மாடலின் போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகன வெர்சன்கள் பொது மக்களின் பார்வைக்காக வெளியீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தோனிஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்த 2023 பெரிக்லிண்டோ எலக்ட்ரிக் வாகன கண்காட்சியில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கான வுல்லிங் ஏர் இவி காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும், இது அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் குடும்பமாக பயணிக்க ஏற்ற கார் கிடையாது என்பது.

தினசரி அலுவலக பயன்பாட்டிற்காகவோ அல்லது 3-4 நபர்கள் அடங்கிய தனி குடும்ப பயன்பாட்டிற்காகவோ மட்டுமே கோமெட் இவி-ஐ பயன்படுத்த முடியும். இதன் ஒரிஜினல் வெர்சனான வுல்லிங் ஏர் இவி-யும் அப்படிதான். அப்படி இருக்கையில், இந்த காரை எவ்வாறு போலீஸார் & தீயணைப்பு படையினர் பயன்படுத்த முடியும் என்கிற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், உங்களுக்கு உலகில் நடைபவை பற்றி பெரியதாக தெரியவில்லை என்று அர்த்தம்.
ஏனெனில் தீயை அணைப்பதற்கு முந்தைய காலங்களில்தான் பெரிய பெரிய வாகனத்தில் நீர் கொண்டு செல்லப்படும். ஆனால் இன்றைய காலத்தில் சில சிலிண்டர் இரசாயன வாயுக்கள் மூலமாகவே அணைத்து விடுகின்றனர். அந்த சிலிண்டர்களை எடுத்து செல்வதற்கு இவ்வாறான வாகனங்களே போதுமானது. அதுமட்டுமின்றி, தீயணைப்பு படை வீரர்கள் தங்களது ஆடைகளையும் காருக்கு பின்னால் மாட்டி வைத்து கொள்ள முடியும். இதற்காகவே பின் இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.

போலீஸாரின் பயன்பாட்டிற்காக, இந்த அளவிற்கு கூட எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. மற்ற வாகனங்களில் இருந்து தனித்து தெரிவதற்காக இந்த இரு வெர்சன்களிலும் 'போலீஸ்' & 'தீயணைப்பு வாகனம்' என்பவை பகாசா மொழியில் ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் காரின் மேற்கூரையில் ஒளிரும் எல்இடி ஸ்ட்ரோப் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தீயணைப்பு பயன்பாட்டிற்கு இவ்வளவு சிறிய கார் எப்படி பயன்படும் என்று உங்களுக்கு இன்னமும் சந்தேகம் இருக்கலாம். பெரிய வாகனங்களை காட்டிலும் இவ்வாறான சிறிய வாகனங்களே ஏற்றவை. ஏனெனில் போக்குவரத்து நெரிசல்களில் கூட இவற்றால் விரைவாக செல்ல முடியும். ஆனால் போலீஸாரின் பயன்பாட்டிற்கு இதை விட வேகமான கார்களே ஏற்றதாக இருக்கும் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications









