MG Cybersterதான் நிறுவனம் உருவாக்கியதிலேயே அதிக பவர்ஃபுல் இ-காராம்... இதோட எச்பி திறன் எவ்ளோ தெரியுமா?
புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG), அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் காரை (Electric Sports Car) வெளியீடு செய்திருக்கின்றது. எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster EV) காரே அது ஆகும். இந்த காரை நிறுவனம் அதிக பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் காராக உருவாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்த எலெக்ட்ரிக் கார் 543 எச்பி பவரை வெளியேற்றும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் அதன் சைபர்ஸ்டார் பற்றிய முக்கிய தகவல்களை சீனா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த ஆவணங்கள் வாயிலாகவே எம்ஜி சைபர்ஸ்டர் சக்தி வாய்ந்ததாக உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Image Source
அதுமட்டுமின்றி, அதிக கவர்ச்சியானதாக இந்த எலெக்ட்ரிக் உருவாக்கப்பட்டு இருப்பதையும் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. சைபர்ஸ்டர் ஓர் சாஃப்ட் டாப் வசதிக் கொண்ட 2-சீட்டர் ரக எலெக்ட்ரிக் காராகும். போர்ஷே சூப்பர் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த காரை எம்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.
அழகிய ஹெட்லைட் மற்றும் முகப்பு பகுதியில் ஏர் இன்டேக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. காரின் கதவுகளில் கை பிடிகள் சற்று வித்தியாசமாக மேற்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டு பகுதியை சிம்பிளனாதாகவும், அதேவேளையில், அழகானதாகவும் காண்பிக்க இத்தகைய வடிவமைப்பு யுக்தியை எம்ஜி பயன்படுத்தி இருக்கின்றது.

Image Source
இதேபோல் முற்றிலும் புதிய கவர்ச்சிகரமான வீல்களே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது விற்பனைக்கு வரும்போது இரு விதமான வீல் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 19 அங்குலம் மற்றும் 20 அங்குலம் எனும் தேர்வுகளே எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறமும் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும்.
இதற்கேற்ப எக்கசக்க பிரீமியம் வசதிகளை இந்த காரில் எம்ஜி நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. பாதியாக துண்டிக்கப்பட்டதைப் போன்ற அமைப்பு உடைய ஸ்டியரிங் வீல், ஸ்போர்ட்ஸ் இருக்கை, மூன்று திரைகள் என எக்கசக்க அம்சங்கள் சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த காரை ஓர் முழு சார்ஜில் 800 கிமீ ரேஞ்ஜ் தரும் வாகனமாகவே எம்ஜி தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த கார் அதிக பவர்ஃபுல்லானதாக மட்டும் இருக்காது, மிக அதீத ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகவும் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த காரில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார் வெறும் 3.0 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காராகவே சைபர்ஸ்டர் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதையே வெகு விரைவில் நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
ஆனால், எப்போது அது விற்பனைக்கு வரும் என்கிற விபரம் வெளியாகவில்லை. இதேபோல் இந்த மின்சார கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பதும் தெரியவில்லை. இப்போதைய நிலவரப்படி எம்ஜி நிறுவனம் இசட்எஸ் இவி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் வரிசையில் விரைவில் கோமெட் இவி எனும் குட்டி எலெக்ட்ரிக் காரை இணைக்க இருக்கின்றது.
இதன் அறிமுகம் இன்னும் ஒரு சில தினங்களில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தகுந்தது. வரும் 19 ஆம் தேதி இதற்கான நாளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே சைபர்ஸ்டர் கார் பற்றிய விபரங்கள் கசந்திருக்கின்றன. இந்த கார் 2024 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
எம்ஜி கோமெட் இவி இந்தியாவின் நகர்புறங்களை மையமாகக் கொண்டு விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதாவது, அதிக நெரிசல் மிகுந்த சாலைகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட காராக கோமெட்டை எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இந்த காரை இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் எம்ஜி வெளியீடு செய்ய உள்ளது. இதன் வருகை டாடா டியாகோ இவி மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









