இந்தியாவின் வாகன திருவிழாவில் மாஸ் காட்டிய சீன நிறுவனம்! போட்டி நிறுவனங்களுக்கு எல்லாம் அள்ளு விட்றுக்கும்!
இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) இன்று (ஜனவரி 11) தொடங்கியது. இதில், பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை போட்டி போட்டு கொண்டு காட்சிப்படுத்தி வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளின் விலைகளை அறிவித்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.
இந்த சூழலில், எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிறுவனம், இஹெச்எஸ் ப்ளக்-இன் ஹைப்ரிட் (eHS Plug-in Hybrid) காரை, 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுடன், எம்ஜி இஹெச்எஸ் கார் போட்டியிடும்.

அது மட்டுமா?
அத்துடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும். எம் இஹெச்எஸ் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4,574 மிமீ, 1,876 மிமீ மற்றும் 1,664 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,720 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 145 மிமீ ஆகவும் உள்ளது.
கவர்ந்து இழுக்கும் டிசைன்!
எம்ஜி இஹெச்எஸ் காரின் முன் பகுதியில் பெரிய க்ரோம் க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில், எல்இடி ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பனி விளக்குகள், ஸ்கிட் பிளேட் ஆகியவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பின் பகுதியில் ட்வின் எக்ஸாஸ்ட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இதன் டிசைன், அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடிய வகையில் உள்ளது.

இன்டீரியர்!
எம்ஜி இஹெச்எஸ் காரின் உட்புறத்தில், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர எம்ஜி நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான பாணியில் இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகளையும் இஹெச்எஸ் காரின் இன்டீரியர் பெற்றுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில், இஹெச்எஸ் காரில், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷனையும் எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.
இன்ஜின்!
எம்ஜி இஹெச்எஸ் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 251 பிஹெச்பி ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டுவதற்கு இந்த இன்ஜின் துணை புரிகிறது. சிறப்பான மைலேஜ் உடன், சிறப்பான செயல்திறனையும் வழங்கும் வகையில் இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இருக்கு பொறுங்க பாஸ்!
எம்ஜி நிறுவனம் இஹெச்எஸ் காரை காட்சிக்கு வைத்திருப்பதுடன், மிகவும் பிரபலமான ஹெக்டர் காரின் 2023 மாடலை (2023 MG Hector) ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் வைத்து, விற்பனைக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் காட்சிக்கும் வைத்துள்ளது.
சீன நிறுவனம்!
எம்ஜி மோட்டார் என்பது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆனால் சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமம்தான், இதன் தாய் நிறுவனம் ஆகும். இந்திய சந்தையில் தற்போது ஹெக்டர், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS Electric SUV) உள்பட பல்வேறு கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு கார்கள், எதிர்காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications








