கொடல உறுவுற சம்பவம் உறுதி! டொயோட்டா ஃபார்ச்சூனர் சோலியை முடிக்க போகும் புது மாடல்! ஆட்டத்த ஆரம்பிக்கலாங்களா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து எம்ஜி க்ளோஸ்டர் கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் எம்ஜி க்ளோஸ்டர் கார் கிடைக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக எம்ஜி க்ளோஸ்டர் இருந்து வருகிறது.

இந்த கார்களுக்கு எல்லாம் மேலும் தலை வலியை கொடுக்கும் வகையில் க்ளோஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கியுள்ளது.
எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான நேரம் நெருங்கி விட்டதையே இது உணர்த்துகிறது. அனேகமாக வரும் 2024ம் ஆண்டின் ஏதாவது ஒரு சமயத்தில், எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனில் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு வசதிகளும் (Features) கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஏற்கனவே பல்வேறு அதிநவீன வசதிகள் நிரம்பிய கார்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அடாஸ் (ADAS) மற்றும் ஐ-ஸ்மார்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் (i-Smart Connected Car Technology) போன்றவை எம்ஜி க்ளோஸ்டர் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இவற்றுடன் மேலும் பல்வேறு புதிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதன்படி பார்த்தால், தற்போதைய மாடலில் வழங்கப்படும் அதே 2 டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும். அவை 2.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் ஆகியவை ஆகும். இதில் முதலாவது டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 161 பிஹெச்பி மற்றும் 375 என்எம் ஆகும்.
அதே நேரத்தில் 2வது டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 215 பிஹெச்பி மற்றும் 480 என்எம் ஆகும். இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருகைக்கு பின், எம்ஜி க்ளோஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) 38.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 43.87 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுகின்ற காரணத்தால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








