இந்திய நிறுவனங்களைக் குறி வைத்து இந்தியாவில் எம்ஜி போடும் மாஸ்டர் பிளான்! இதை யாருமே எதிர்பார்க்கல!
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கோமெட் இவி எனும் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த 5 ஆண்டு திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் காலடித் தடத்தைப் பதித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டர் கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று விற்பனையும் யாரும் எதிர்பாராத அளவில் வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தன் காலடித் தடத்தை அழுத்தமாகப் பதிக்கப் பல புதிய கார்களை இந்திய மார்கெட்டில் களம் இறக்க முடிவு செய்தது. அதன் பலனாக இசட்எஸ் இவி என்ற முதல் எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே குறைந்த விலை இவி காராக எம்ஜி கோமெட் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் இந்தியாவில் ரூ7.98 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் இன்னும் ஒரு சில நாட்களில் துவங்கவுள்ளது. டெலிவரியும் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டிற்கான திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்ஜி நிறுவனம் தற்போது குஜராத்தில் ஹாலோல் என்ற பகுதியில் தனது ஆலையை அமைத்துள்ளது. அங்கு தான் எம்ஜி கார்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆலையில் ரூ5 ஆயிரம் கோடி பணத்தை முதலீடு செய்ய எம்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிகமான கார்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த ஆலையில் ஆண்டிற்கு 1.2 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் புதிய முதலீடு மூலம் இன்னும் 20 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு எடுத்து இந்த ஆலையை ஆண்டிற்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கும் ஆலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.

எம்ஜி கோமெட் காருக்கு பிறகு எம்ஜி நிறுவனம் அடுத்து எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தில் அதிக ஆர்வம் காட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த 5 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் 2028ம் ஆண்டு வரை அந்நிறுவனம் தெளிவான பாதையை தற்போதே வகுத்துவிட்டது.
மேலும் புதிய முதலீடு மூலம் பேட்டரி தயாரிப்பு ஆலையை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் உருவாக்கப்படும் பேட்டரிகளை தங்கள் காரில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்ல வாகன தயாரிப்பை முழுவதுமாக இந்தியாவிலேயே செய்யும் முயற்சியையும் கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எம்ஜி நிறுவனம் இந்த முடிவு எடுத்து அதற்காக களத்தில் இறங்கியுள்ளது.
இது போக எம்ஜி நிறுவனம் ஹைட்ரஜன் ப்யூல் செல் தொழிற்நுட்பத்தில் இயங்கும் காரை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இது மற்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் எம்ஜி நிறுவனத்தின் ஹைட்ரஜன் ப்யூல் செல் வாகனத்தின் ஹப்பாக இந்தியா மாறும். இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனை செய்யும் கார்களில் 60 சதவீதம் எலெக்ட்ரிக் அல்லது மாற்று எரி சக்தி கொண்ட காராக இருக்க வேண்டும் என முடிவுடன் களத்தில் இறங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு எம்ஜி நிறுவனம் ரூ5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டு வருவது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உதவியைச் செய்யும். எம்ஜி எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தனது முதலீட்டைத் திருப்பியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் எம்ஜி மிக முக்கியமான இடத்தை பிடிக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications









