ஒரு மாதத்தில் இத்தனை எம்ஜி கார்கள் விற்பனையானதே கிடையாது... கோமெட்டின் வருகைக்கு முன்பே எம்ஜியின் புதிய சாதனை!
இந்திய சந்தையில் சமீபத்தில் நுழைந்த கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான எம்ஜி மோட்டார் கடந்த 2023 மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை வணிகமாக விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது, கடந்த 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 6,051 கார்களை சில்லறையாக இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. மொத்தமாக ஒரு நிறுவனமோ அல்லது அமைப்போ வாங்கும் கார்கள் எண்ணிக்கையை கழித்து, தனிநபர் வாங்கும் கார்கள் எண்ணிக்கையே சில்லறை விற்பனை எண்ணிக்கை ஆகும்.

6,051 என்பது 2022 மார்ச் உடன் ஒப்பிடுகையில் 28% அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, இந்திய சந்தையில் நுழைந்ததில் இருந்து ஒரு மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் பதிவு செய்துள்ள அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். குறைக்கடத்திகளுக்கு இருந்த உலகளாவிய பற்றாக்குறை சீரானதால் இந்த சாதனையை படைக்க முடிந்துள்ளதாக கூறும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இதனை எதிர்காலத்திலும் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் முதன்மை இயக்குனர் ராகேஷ் சிதானா கருத்து தெரிவிக்கையில், "அடுத்த தலைமுறை எம்ஜி ஹெக்டர், இந்தியாவின் முதல் இண்டர்நெட் எஸ்யூவி சந்தையில் அதன் வலுவான வளர்ச்சியை தொடர்கிறது மற்றும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் 2வது மிக உயர்ந்த வாழ்நாள் விற்பனையை பதிவு செய்துள்ளது.

இதேபோல், இந்தியாவின் முதல்-முழு எலக்ட்ரிக் இண்டர்நெட் எஸ்யூவியான இசட்.எஸ் இவி-யும் சந்தையில் நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது" என்றார். ஹெக்டர், இசட்.எஸ் இவி மட்டுமின்றி, தனது அனைத்து கார்களின் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது அனைத்து கார்களையும் கடந்த மார்ச் மாத விற்பனை சாதனைக்கு எம்ஜி நிறுவனம் பறைச்சாற்றுகிறது.
இவ்வளவு ஏன், எம்ஜி பிராண்டில் இருந்து குறைவாகவே விற்பனையாக கூடிய க்ளோஸ்டர் பிரீமியம் எஸ்யூவி காரும் நேர்முகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதாக எம்ஜி தெரிவித்துள்ளது. க்ளோஸ்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக கோமெட் கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இசட்.எஸ் இவி-க்கு அடுத்து இந்திய சந்தையில் 2வது எலக்ட்ரிக் எம்ஜி காராக கோமெட் விளங்க உள்ளது. இருப்பினும், இசட்.எஸ் காரை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என்று கோமெட் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அளவில் சிறியதாக இருப்பதால் விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என்பது மட்டுமின்றி, காரின் ரேஞ்சும் அதிகமாக இருக்கும். இந்த வகையில், கோமெட் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 150-இல் இருந்து 200கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இந்திய ஆட்டோமொபைல் சந்தையை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமான விஷயம் அல்ல. கோமெட் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி இருப்பதன் மூலம் இந்த விஷயத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் நன்கு புரிந்து கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவில் கார்களின் விற்பனையை எம்ஜி பதிவு செய்துள்ள நிலையில், கோமெட் அறிமுகத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரலாம்.


Click it and Unblock the Notifications









