ஒரே நாளில் இவ்ளோ கார்கள் டெலிவரியா! மொத்தமாக வாங்கி போட்ட பிரபல நிறுவனம்! இது எல்லாருக்கும் பிடிச்ச கார் ஆச்சே
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், எம்ஜி ஹெக்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
2023 எம்ஜி ஹெக்டர் காரின் விலை (Price) 14.73 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே சமயம் 2023 எம்ஜி ஹெக்டர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 21.73 லட்ச ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். 2023 எம்ஜி ஹெக்டர் காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

இந்த காரின் பெட்ரோல் மாடல்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.அதிகபட்சமாக 143 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் டீசல் மாடல்களில் பொருத்தப்பட்டிருப்பது 2.0 லிட்டர் இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) போன்ற மிகவும் பிரபலமான கார்களுடன் எம்ஜி ஹெக்டர் கார் போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் கார்களை தற்போது 'பல்க்' டெலிவரி செய்து அசத்தியுள்ளது. ஒரே நாளில் 108 எம்ஜி ஹெக்டர் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. அதுவும் ஒரே நிறுவனத்திற்கு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ஒரே நாளில் 108 ஹெக்டர் கார்களை டெலிவரி பெற்றிருப்பது ஓரிக்ஸ் (ORIX) நிறுவனம் ஆகும்.
ஓரிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார்களை குத்தகைக்கு வழங்குவது மற்றும் வாடகைக்கு வழங்குவது ஆகிய வர்த்தங்களை செய்து கொண்டுள்ளது. இந்த துறையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும், மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகவும் ஓரிக்ஸ் திகழ்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 108 ஹெக்டர் கார்களையும், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், ஓரிக்ஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது.
2023 எம்ஜி ஹெக்டர் காரானது, ஸ்டைல், ஸ்மார்ட், ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ மற்றும் ஷேவி ப்ரோ என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்த வேரியண்ட்டை ஓரிக்ஸ் நிறுவனம் டெலிவரி எடுத்துள்ளது? என்ற தகவல் வெளியாகவில்லை. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு சில வேரியண்ட்களை கலவையாக கூட ஓரிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் தவிர இன்னும் பல்வேறு கார்களையும் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS Electric SUV) காரும் ஒன்றாகும். இது சற்று விலை உயர்ந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடுத்தர வர்க்க மக்களையும் கவரும் வகையில், 10 லட்ச ரூபாய்க்குள் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








