இந்தியாவிற்கு இன்னொரு குட்டி எலெக்ட்ரிக் வருதுபோலையே! இது மட்டும் சேலுக்கு வந்துச்சு டூ-வீலரையே காலி பண்ணிரும்
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் எம்ஜி-யும் ஒன்று. இந்த நிறுவனமே இந்தியாவில் குட்டி எலெக்ட்ரிக் கார் ஒன்றிற்கான டிசைனை பேடண்ட் பதிவுச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக சந்தையில் பவுஜன் யெப் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் காரின் டிசைனுக்கே அது இந்தியாவில் பேடண்ட் பதிவைச் செய்து இருக்கின்றது.
ஏற்கனவே நிறுவனத்தின் கீழ் கோமெட் இவி எனும் எலெக்ட்ரிக் விற்பனையில் இருக்கின்றநிலையில், மற்றுமொரு குட்டியான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் எம்ஜி களமிறங்கி இருப்பது இதன் வாயிலாகத் தெரிய வந்திருக்கின்றது. பவுஜன் இது ஓர் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். மிகச் சமீபத்திலேயே இந்த நிறுவனம் யெப் எலெக்ட்ரிக் காரைச் சீன சந்தையில் வெளியீடு செய்தது.

இதையே எம்ஜி தன்னுடைய பிராண்டின் கீழ் இந்திய சந்தையில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதாவது, டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை மாருதி சுஸுகி தன்னுடைய பிராண்டின் கீழ் 'இன்விக்டோ' எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதைப் போல, எம்ஜி-யும் பவுஜனின் யெப் எலெக்ட்ரிக் காரை மாற்று பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
பவுஜன் மற்றும் எம்ஜி ஆகிய இரு நிறுவனங்களின் தாய் நிறுவனமாக எஸ்ஏஐசி (SAIC) இருக்கின்றது. இதுவே இந்த முடிவை எட்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் இப்போதைய செயல்களை வைத்து பார்க்கையில் இந்த குட்டி எலெக்ட்ரிக் காரின் வருகை வெகுவிரைவிலேயே இந்திய சந்தையில் அமைந்துவிடும் என நினைக்கத் தோன்றுகின்றது.

ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 2025க்குள் இந்த காரின் வருகை அரங்கேறிவிடும் என கூறுகின்றன. இந்தியாவிற்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் பவுஜன் யெப்-இன் டிசைன் படம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இதன் வாயிலாக சீனா-இந்தியா யெப் காருக்கு இடையில் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
குறிப்பாக, வெளிப்புற டிசைனில் மட்டுமே லேசான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் வித்தியாசமான ஸ்டைலை பிரதிபலிப்பதற்காக கணிசமான மாற்றங்கள் கொண்ட உடல் பாகங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அது பெரிய அளவில் மாற்றத்தை வழங்கவில்லை என்றே கூற வேண்டும்.

ஏனெனில், மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும் யெப் காரையே அது பிரதிபலிக்கின்றது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலே என்பது குறிப்பிடத்தகுந்தது. அது சீன சந்தையில் உல்லிங் ஏர் இவி என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டே அது தற்போது விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. பவுஜன் யெப் எலெக்ட்ரிக் ஓர் ரெட்ரோ ஸ்டைலிலான எஸ்யூவி ரக காராகும். இதுமாதிரியான கார்களுக்கு இந்தியாவில் பலர் அடிமையாகி இருக்கின்றனர். இதனுடன் கூடுதல் சிறப்பாக குட்டி எலெக்ட்ரிக் கார் ரகத்திலும் யெப் வர இருக்கின்றது.
ஆகையால், விற்பனையில் டூ-வீலர்களையே இது மிஞ்சும் என எதிர்பார்க்கலாம். மேலும், இந்த யெப் காரில் மஹிந்திரா தார் காரை போல 3 கதவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அதேவேளையில், இந்த காரில் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கோமெட் இவி-யை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குளோபல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வெயிக்கிள் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே யெப்-ம் வடிவமைக்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. பவுஜன் யெப் எலெக்ட்ரிக் காரில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதுவும் பின் பக்க ஆக்ஸில்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது வீலுக்கு 68 எச்பி மற்றும் 140 என்எம் இயங்கு திறனை வழங்கும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். ஆகையால், டூ-வீலரை போல் இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இக்காரில் 28.1 kWh லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 303 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இந்திய மாடலில் இதிலும் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாக தெரிக்கப்படவில்லை. மேலும், இந்த காரின் உற்பத்தி உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அந்தவகையில், கோமெட் இவி உற்பத்தியைப் போலவே குஜராத்தில் உள்ள ஹலோல் ஆலையிலேயே யெப் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குட்டி எலெக்ட்ரிக் காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே எம்ஜி தன்னுடைய இரண்டாவது எலெக்ட்ரிக் காருக்கான பிளானை தற்போது போட்டு இருக்கின்றது. இதற்கு எப்படி வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









