இப்படியொரு எலக்ட்ரிக் கார் இந்தியாவிற்காகவா... எம்ஜி நிறுவனத்தை இனி கையில் பிடிக்க முடியாது போலயே!!
எம்ஜி மோட்டார் நிறுவனம் மிக விரைவில் இந்திய சந்தையில் அளவில்-சிறிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த மாதிரியான எலக்ட்ரிக் கார் அது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் முனைப்புடன் இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புதிய கோமெட் மினி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அளவில் சிறிய எலக்ட்ரிக் காராக விளங்கும் இது பெட்டகம் வடிவத்திலானது. இந்த எலக்ட்ரிக் காரில் வெறும் 3 கதவுகள் மட்டுமே பொருத்தப்படுகின்றன.

இவ்வாறு அளவில் மிகவும் சிறியதாக இருப்பினும், பயணிகள் சவுகரிய வசதிகளில் எந்த குறையும் இல்லாததால் எதிர்மறையான கருத்துகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து கோமெட் பெறுவதில்லை. இந்த எலக்ட்ரிக் கார் எம்ஜியின் உலகளாவிய சிறிய எலக்ட்ரிக் வாகன (GSEV) ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் எதிர்கால எம்ஜி எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட உள்ளதாம்.
இந்த ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும், அந்த எலக்ட்ரிக் கார் கோமெட் எனவும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் எம்ஜி கோமெட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் பேட்டரியை டாடா ஆட்டோ கோம்ப் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

எம்ஜியின் அடுத்த அறிமுகம் கோமெட் இவி ஆக இல்லையென்றாலும், குறைந்தப்பட்சம் கோமெட் இவி-இன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி கார் GSEV ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதாக, அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இ260 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி கார் வெறும் 3 மீட்டரில் நீளத்தை கொண்டதாக இருக்கும். இதனால் நெரிசல் மிகுந்த அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கு எம்ஜி மோட்டாரின் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி ஏற்றதாக இருக்கும். தோற்றத்தை பொறுத்தவரையில், யெப் மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட் மாடலின் டிசைன்களை இந்த எலக்ட்ரிக் கார் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யெப் மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட் கடந்த 2022ஆம் ஆண்டில் தான் வெளியீடு செய்யப்பட்டது. சுஸுகி ஜிம்னி, ஃபோர்டு பிரான்கோ வாகனங்களை போன்று ரெட்ரோ ஸ்டைலில் பெட்டகம் வடிவில் இருந்த இந்த கான்செப்ட் மாடலில் அதற்கேற்ப பெரிய சக்கரங்கள் மற்றும் டயர்கள் பொருத்தப்பட்டு இருந்தன. எம்ஜி மோட்டார் நிறுவனம் கோமெட் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 17.3 kWh பேட்டரி தொகுப்பை பொருத்துகிறது.
இந்த பேட்டரி ஆனது வாகனத்தின் முன் & பின்பக்கத்தில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்குகிறது. இதில் பின்பக்கத்தில் பொருத்தப்படும் மோட்டார் மூலமாக அதிகப்பட்சமாக 40 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். அதுவே இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக ஒரே நேரத்தில் 100 எச்பி வரையில் ஆற்றலை பெறலாம்.


Click it and Unblock the Notifications








