கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் வரும் புதிய எலெக்ட்ரிக் கார்! டாடா தயாரிப்பை எல்லாம் மென்னு முழுங்க போகுது!
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், ஏராளமான முன்னணி நிறுவனங்கள், குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் குறைவான விலையில் டியாகோ எலெக்ட்ரிக் காரை (Tata Tiago EV) விற்பனைக்கு அறிமுகம் செய்ததுடன், அதன் டெலிவரி பணிகளையும் தற்போது தொடங்கி விட்டது. அத்துடன் பன்ச் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் டாடா மோட்டார்ஸ் (Tata Punch EV)நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. மறுபக்கம் சிட்ரோன் நிறுவனம் இசி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் காரை இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் மற்றும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் ஆகியவையும் மிகவும் குறைவான விலையில்தான் விற்பனைக்கு வரவுள்ளன.

களத்தில் இறங்கும் எம்ஜி!
இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனமும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எம்ஜி ஏர் (MG Air) என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. இது அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை சாலை சோதனை செய்யும் பணிகளை எம்ஜி நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பரோடா நகரில் இந்த கார் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
டாடா நானோ எலெக்ட்ரிக் கார் வருதா!
எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரின் நீளம் 2,900 மிமீ ஆகும். ஆனால் இந்த எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. டாடா நானோ எலெக்ட்ரிக் கார் (Tata Nano Electric) விற்பனைக்கு வந்தால் வேண்டுமானால், அது எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். டாடா நானோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டாலும், அது நடக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மற்றும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களுடன், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.

விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விலை குறைவானதாக இருந்தாலும் கூட, எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதன்படி பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டிவிட்டி வசதிகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பரான ரேஞ்ச்!
எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரானது, ஜிஎஸ்இவி (GSEV - Global Small Electric Vehicles) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் உருவத்தில் சிறியது என்பதால், எடையும் குறைவானதாக இருக்கும். 20 kWh அல்லது 25 kWh திறனுடைய பேட்டரி தொகுப்பு, இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்ய கூடிய தொலைவு) 150 - 200 கிலோ மீட்டர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவை மனதில் வைத்து...
இந்த எலெக்ட்ரிக் காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேட்டரியை சார்ஜ் செய்வது பெரிய தலைவலியாக இருக்காது. இந்தியாவின் காலநிலை மற்றும் சாலை சூழல்களை மனதில் வைத்து எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே அதிக வெப்பத்தினால் பேட்டரி தீ பிடிப்பது போன்ற பிரச்னைகள் இருக்காது என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
ஒரு வருஷத்துக்கு இவ்ளோ கார்களை உற்பத்தி பண்ண போறாங்களா!
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு ஆண்டுக்கு 36 ஆயிரம் ஏர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின் நாட்களில் இந்த உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








