வெளிநாடுகளில் செம்ம ஃபேமஸான எம்ஜி கார் ஆச்சே இது... ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி4 எலக்ட்ரிக் கார்!!
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான எம்ஜி எலக்ட்ரிக் காராக விளங்கும் எம்ஜி4 இன்னும் சில காலத்தில் இந்தியாவிற்கும் கொண்டுவரப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த எலக்ட்ரிக் கார் நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், கொரோனாவினால் 1 வருட தாமதத்திற்கு பிறகு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவரும் 2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு வெளிநாட்டு கார்களை காட்சிக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வகையில் இந்த கண்காட்சியின் அரங்கில் இடம்பெற்றுள்ள எம்ஜி4 எலக்ட்ரிக் கார் ஆனது எஸ்யூவி ரக கார் போன்று இருந்தாலும், எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹேட்ச்பேக் காராகும்.

இருப்பினும் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் நம்மூர் சாலைக்கேற்ப கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்டுள்ளதை ஆட்டோ எக்ஸ்போவில் தெளிவாக காண முடிந்தது. இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் 4287மிமீ, அகலம் 2060மிமீ, உயரம் 1504மிமீ மற்றும் வீல்பேஸ் (சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2705மிமீ ஆகும். எம்ஜி4 காரின் உட்பக்கத்தில் கவனிக்கக்கூடிய அம்சங்களாக 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க கொடுக்கப்பட்டிருக்கும் 7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையினை சொல்லலாம்.
இதில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது மற்ற கார்களில் உள்ளதை போன்று ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதனுடன் மிடில் இருக்கை வரிசைக்கும் ஏசி வெண்ட்ஸ், சுழலக்கூடிய கியர் செலக்டர் உள்பட மற்ற கண்ட்ரோல்களும் நம்மை வசீக்கரிக்கின்றன. அதேபோல் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் கார்களில் தொழிற்நுட்ப வசதிகளை வழங்குவதிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடிய நிறுவனம் கிடையாது.

இதனாலேயே இந்த எம்ஜி4 எலக்ட்ரிக் காரிலும் ADAS தொழிற்நுட்பத்தை பார்க்க முடிகிறது. இந்த தொழிற்நுட்ப தொகுப்பின் மூலமாக ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளை அடையாளம் காணும் வசதி, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ் அம்சங்களை பெறலாம். இத்தகைய ADAS தொகுப்பு ஆனது தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வரும் ஒன்றாக மாறி வருகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் கூட எம்ஜி4 உடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி இருந்த எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில் ADAS-ஐ புதியதாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜி4 எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், ADAS போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெறுவதினால் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 51kWh மற்றும் 64kWh என்ற இரு விதமான பேட்டரி தேர்வுகளில் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 51kWh பேட்டரி தொகுப்பை பெறும் எம்ஜி4 வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 350கிமீ வரையிலான மைலேஜையும், 64kWh பேட்டரி தொகுப்பை பெறும் எம்ஜி4 வேரியண்ட்டில் 450கிமீ வரையிலான மைலேஜையும் பெற முடியும் என்கிறது எம்ஜி. இந்த இரு பேட்டரி தேர்விலும் கிடைக்க பெறும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் ஆனது 250 என்எம் ஆகும். எம்ஜி4 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 7.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.
150 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் 51kWh பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம். அதுவே 64kWh பேட்டரியை சார்ஜ் ஏற்ற 35 நிமிடங்களே போதுமானதாக இருக்கும். இந்தியாவில் எம்ஜி4 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் எம்ஜி4-க்கு இணையான தோற்றம் & விலை கொண்ட எம்ஜி இசட்.எஸ் இவி ஏற்கனவே விற்பனையில் உள்ளது. தற்போதைய சூழலில் விற்பனைக்கு வந்தால் எம்ஜி4-இன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.30 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








