இந்த விஷயத்தில் மஹிந்திராவை தேடி செல்லும் கஸ்டமர்ஸ்!! நம்ம இந்திய தயாரிப்புகளுக்கு இப்படியொரு வரவேற்பா...
இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை வாங்குவோரே அதிகமாக உள்ளனர் என்றாலும், அளவில் சற்று பெரிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களும் விற்பனையில் உள்ளன. அத்தகைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் கடந்த 2022 டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்வதில் கடந்த சில வருடங்களாகவே மஹிந்திரா நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு மஹிந்திரா பிராண்டில் இருந்து சமீப காலமாக தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் புதிய மாடர்ன் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் பிராண்டின் புதிய லோகோ மற்றும் அடாஸ் வசதிகளுடன் எக்ஸ்யூவி700 அறிமுகப்படுத்தப்பட்டது.

எக்ஸ்யூவி500-இன் புதிய தலைமுறை மாடலாக களமிறக்கப்பட்ட இதன் விற்பனை எதிர்பார்த்ததை போல் வேகமெடுத்து கொண்டிருந்த சமயத்தில், மற்றொரு பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி காரான ஸ்கார்பியோவின் புதிய தலைமுறை மாடல் ஸ்கார்பியோ என் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் பழைய ஸ்கார்பியோ ரசிகர்களையும் கவர் செய்யும் விதமாக ஸ்கார்பியோ கிளாசிக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களாக ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் உள்ளன. இவை இரண்டும் மொத்தமாக கடந்த மாதத்தில் 7,003 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 டிசம்பர் மாதத்தில் முன்பு விற்பனையில் இருந்து பழைய ஸ்கார்பியோ கார் வெறும் 1,757 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஸ்கார்பியோ கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 298.58% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்த மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனையில் ஸ்கார்பியோ கார்களின் பங்கு மட்டுமே 35.10% ஆகும். இதற்கடுத்த 2வது இடத்தில் எக்ஸ்யூவி700 உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 5,623 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2021 ஆகஸ்ட்டில் அறிமுகமாகி இருந்த இந்த கார் 2021 டிசம்பரில் 3,980 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதன்படி, எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை 41.28% அதிகரித்துள்ளது.
இந்த இரு மஹிந்திரா கார்களுக்கு அடுத்து 3வது இடத்தில் டாடா ஹெரியர் உள்ளது. விரைவில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட உள்ள ஹெரியர் 3வது இடத்தை பிடித்திருப்பினும், இந்த காரின் விற்பனையானது 2021 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் 4.74% குறைந்துள்ளது. அதாவது, 2021 டிசம்பரில் 2,234 ஹெரியர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த டிசம்பரில் 2,128 ஹெரியர்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கார் பிராண்டான எம்ஜி மோட்டாரின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களான ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. ஹெக்டர் ப்ளஸ் ஆனது ஹெக்டரின் லாங்-வீல்பேஸ் வெர்சன் மட்டுமே ஆகும். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,575 எம்ஜி ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், 2021 டிசம்பரில் 1,215 ஹெக்டர் கார்களின் விற்பனை மட்டுமே பதிவாகி இருந்தன. இந்த வகையில் ஹெக்டர் கார்கள் 29.63% விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்த லிஸ்ட்டில் எம்ஜி ஹெக்டர் கார்களை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் கார்கள் உள்ளன. இவை இரண்டின் கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,502 மற்றும் 1,478 ஆகும். 2021 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் இவை இரண்டின் விற்பனையும் கடந்த டிசம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளன. இவற்றிற்கு அடுத்து குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையாகி உள்ளவை என்று பார்த்தால், ஜீப் காம்பஸ் (484), ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (130) கார்களாகும். கடைசி இரு இடங்களில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் உள்ளன.


Click it and Unblock the Notifications








