மஹிந்திரா ஸ்கார்பியோவை சேல்ஸில் கிட்ட நெருங்க கூட முடியாமல் திணறும் டாடா!! ஒரே மாதத்தில் 12 ஆயிரம் கார்களா!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களாக சிறப்பாக இருந்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஏனெனில், சாலைகளில் எஸ்யூவி ரக கார்களே அதிகம் காட்சித் தருகின்றன. இந்த நிலையில் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
எஸ்யூவி கார்கள் பல வகைப்படுகின்றன. அவற்றுள் ஒருவகை தான் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களாகும். தமிழில் சொல்ல வேண்டுமென்றால், நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள். இத்தகைய எஸ்யூவி கார்கள் 4.4 மீட்டரில் இருந்து 4.7 மீட்டர் வரையிலான நீளத்தை கொண்டவை. இத்தகைய எஸ்யூவி கார்களை அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் விற்பனை செய்கின்றன.

ஆனால், விற்பனையில் முன்னணியில் இருப்பது என்னவோ மஹிந்திரா தான். மஹிந்திராவில் இருந்து ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி700 என இரு மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டுதான் இந்தியாவில் அதிக பேர் வாங்கும் முதல் இரு மிட்-சைஸ் எஸ்யூவி கார்களாக விளங்குகின்றன. இந்த இரண்டில், அதிகப்பட்சமாக 12,185 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் பாதியாக, வெறும் 6,455 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 5,730 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ கார்கள் தற்சமயம் 2 விதமான பாடி ஸ்டைலில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒன்று ஸ்கார்பியோ என், மற்றொன்று ஸ்கார்பியோ கிளாசிக் ஆகும். ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள எக்ஸ்யூவி700 கார்கள் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 7,221 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை எண்ணிக்கையும் 2022 நவம்பர் மாதத்தில் 5,701 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த வகையில், கடந்த மாதத்தில் 1,500க்கும் அதிகமான எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
3வது இடத்தை எம்ஜி ஹெக்டர் தனதாக்கி உள்ளது. பிரிட்டிஷ் கார் பிராண்டான எம்ஜி 2019இல் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் கார் ஹெக்டர் ஆகும். அதன்பின், சில வருடங்கள் கழித்து, ஹெக்டரின் லாங்-வீல்பேஸ் வெர்சன் ஹெக்டர் பிளஸ் என்ற பெயரில் களமிறக்கப்பட்டது. மொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 2,130 ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் கார்களும் 2022 நவம்பர் மாதத்தில் 1,773 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா ஹெரியர் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 2,326 ஹெரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2022 நவம்பர் மாதத்திலும் கிட்டத்தட்ட இத்தனை ஹெரியர் கார்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.
5வது இடத்தில் ஹூண்டாய் அல்கஸார் 1,913 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 2,566 ஹூண்டாய் அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த 2023 நவம்பர் மாதத்தில் 653 அல்கஸார் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தை டாடா சஃபாரி கார் 2,207 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. 7வது, 8வது மற்றும் 9வது இடங்களில் ஜீப் காம்பஸ் (216), ஹூண்டாய் டக்ஸன் (118) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (150) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பொதுவாகவே சற்று விலைமிக்கவை. இருப்பினும், கடந்த நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 28 ஆயிரத்திற்கும் அதிகமான மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில் இருந்து, இந்திய வாடிக்கையாளர்களின் தேவை மெல்ல, மெல்ல விலைமிக்க எஸ்யூவி கார்களின் மீதும் சாய்ந்து வருவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









