மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனையை மாருதியால் கூட நிறுத்த முடியல!! நாளுக்கு நாள் கஸ்டமர்ஸ் குவியுறாங்க!
அளவில் பெரியதான மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி காராக மஹிந்திரா ஸ்கார்பியோ விளங்குகிறது. ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ-என் என இரு விதமான ஸ்கார்பியோ மாடல்கள் சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 10,520 ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் விற்பனையாகியுள்ளன.

அதுவே 2022ஆம் ஆண்டின் இதே ஜூலை மாதத்தில் வெறும் 3,803 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலையை காட்டிலும், இந்த ஜூலையில் சுமார் 6,717 ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஏனெனில் அந்த சமயத்தில் ஸ்கார்பியோ-என் கார் மட்டுமே விற்பனையில் இருந்தது. பழைய தோற்றத்திலான ஸ்கார்பியோ கிளாசிக் கார் 2022ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்திலும் மஹிந்திராவின் தயாரிப்பான எக்ஸ்யூவி700 கார் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 6,176 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2022 ஜூலையில் 101 எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

டொயோட்டாவின் ஹைப்ரீட் எஸ்யூவி காரான இன்னோவா ஹைகிராஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 4,634 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. சந்தையில் இந்த டொயோட்டா ஹைப்ரீட் கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 4வது இடத்தில் எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் & ஹெக்ட்ர் பிளஸ் கார்கள் உள்ளன. 2022 ஜூலையில் 2 ஆயிரம் யூனிட்களுக்கு 12 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்த ஹெக்டர் கார்கள் கடந்த ஜூலையில் 2,103 யூனிட்கள் விற்கப்பட்டு உள்ளன.
விற்பனையில் எம்ஜி ஹெக்டர் கார்களுக்கு போட்டியாக விளங்கும் டாடா மோட்டார்ஸின் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் இந்த லிஸ்ட்டில் அடுத்த 5வது மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளன. எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் என இரு கார்களுக்கும் சேர்த்தே 2,103 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூலையில் ஹெரியர் கார் மட்டுமே 2,092 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையை சொல்லப்போனால், ஹெரியர் கார்களின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுமார் 3,254 ஹெரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா சஃபாரி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த 2023 ஜூலை மாதத்தில் 1,687 சஃபாரி கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2022 ஜூலையிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான சஃபாரி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஹூண்டாய் மோட்டார்ஸின் அல்கஸார் 1,443 யூனிட்களின் விற்பனை உடன் 7வது இடத்தை தனதாக்கி உள்ளது. ஆனால் 2022 ஜூலையில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக சுமார் 2,888 அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜூலை 5ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் அறிமுகமான இன்விக்டோ கடந்த மாதத்தில் வெறும் 757 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

9வது மற்றும் 10 வது இடங்களில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி கார்கள் உள்ளன. இவை இரண்டின் கடந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கை முறையே 277 மற்றும் 239 ஆகும். இதில் டக்ஸன் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றாலும், ஜீப் காம்பஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த கார் மாடல்கள் மட்டுமின்றி, இந்தியாவில் மேலும் இரு மிட்-சைஸ் எஸ்யூவி கார்களும் விற்பனையில் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (169) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் (8) என்பவை அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் இந்த குறிப்பிட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் சமீப காலங்களில் பல்வேறு புதிய கார்கள் அறிமுகமாகி உள்ளன. இருப்பினும், இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதி சுஸுகியின் இன்விக்டோ இந்த வரிசையில் 8வது இடத்தையே பிடித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த பிரிவில் மாருதி சுஸுகியின் ஒரே ஆயுதம் இன்விக்டோ மட்டுமே. மறுப்பக்கம் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









