சொன்னபடியே 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் இன்னோவா காரை அறிமுகம் செய்த டொயோட்டா.. மார்க்கெட்டே ஒரு வழியாகபோகுது!
காற்று மாசு (Air Polution) மிகப் பெரிய தலைவலியாக உலக நாடுகளுக்கு மாறி இருக்கின்றது. இதனால்தான் இந்தியா பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டையும் அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணிகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் முழுமையாக 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் இன்னோவா காரை டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இது உலகளாவிய வெளியீடு என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, உலக அளவில் தன்னுடைய ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் இன்னோவா காரை அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை இந்த வெளியீட்டின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றது. இந்த காரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியீடு செய்து வைத்தார்.
இதுவே உலகின் முதல் பிஎஸ் 6 கட்டம் 2 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிஃபைடு ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (BS-VI (Stage-II), electrified flex-fuel) காராகும். இத்தகைய காரையே நம்முடைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "பைக், கார் மற்றும் ஆட்டோ ஆகியவை எத்தனாலில் ஓட வேண்டும் என்பது நம் அனைவரின் கனவாக இருக்கின்றது" என்றார். உண்மையில் இது நம்முடைய கனவு மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த உலகின் கனவாகவே எத்தனால் வாகனங்கள் இருக்கின்றன.
விவசாய கழிவுகளில் இருந்து தயாரிக்கக் கூடிய ஓர் எரிபொருளே எத்தனால் ஆகும். பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளைக் காட்டிலும் குறைவான மாசையே இது ஏற்படுத்தும். அதுமட்டுமில்லைங்க, இதை உற்பத்தி செய்யவும் பெரிய அளவில் செலவாகாது. எனவே இதன் விலை மலிவானதாக இருக்கும்.

இதனால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலையில் விற்கப்படும் நாடுகளில் எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. தற்போது டொயோட்டா வெளியீடு செய்திருப்பது இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையிலான ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனம் ஆகும். இப்போது இந்த காரை இரு விதமான ஆப்ஷன்களில் மட்டுமே டொயோட்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அதாவது, இன்னோவா ஹைகிராஸ் காரில் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + ஹைபிரிட் ஆப்ஷன்களில் மட்டுமே டொயோட்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதில் எத்தனால் ஆப்ஷனையும் அது வழங்கும் என தெரிய வந்துள்ளது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது துள்ளியமாக தெரியவில்லை.
இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சொகுசான மற்றும் அதிக மைலேஜை விரும்புபவர்கள் மத்தியில் இன்னோவா ஹைகிராஸுக்கு சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எலெக்ட்ரிஃபைடு ஃப்ளெக்ஸி ஃப்யூவல் இன்னோவா வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இதுவும், ஹைகிராஸ் காரை போல அதிக மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடும் மிராய் (hydrogen-powered Toyota Mirai EV) காரை வெளியீடு செய்தது. இதையும் அமைச்சர் நிதின் கட்கரியே வெளியீடு செய்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பசுமை இயக்கம் கொண்ட காராகும். இந்த காரின் எக்சாஸ்டில் இருந்து கார்பனுக்கு பதிலாக நீராவியே வெளியேறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே அதிக மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் மலிவு விலையில் தயாரிக்கப்பட உள்ள எத்தனாலில் இயங்கக் கூடிய இன்னோவாவை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டொயோட்டா களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









