ராத்திரி நேரத்தில் நகருக்குள் புகுந்த மர்ம கார்.. டிரைவரே இல்லாமல் ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி! வீடியோ!
ஆள் இல்லாமல் வாகனங்கள் ஓடுவதை எல்லாம் திரைப்படம் மற்றும் இணைய தளங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவில் இருக்கும் குறிப்பிட்ட நகரத்தைச் சேர்ந்த மக்கள் ராத்திரி நேரத்தில் தங்களுடைய பகுதியில் ஆளே இல்லாமல் ஓர் வாகனம் ஓடியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
ஆளில்லாமல் ஓடிய அந்த வாகனம் உண்மையிலேயே ஆளே இல்லாமல் ஓடக் கூடிய வாகனம் ஆகும். அதாவது, அதை ஓட்ட டிரைவர் தேவையில்லை. பிரேக் பிடித்தல், காரை இயக்குதல் மற்றும் வலது-இடது திரும்புவது என அனைத்தையும் தானே செய்யும் திறன் கொண்ட காரே அது ஆகும்.

இத்தகைய ஓர் வாகனமே சாலையில் ஓடும்போது அதனைக் கண்டு பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அந்த வாகனம் நகருக்குள் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
வீடியோவை அனுரூத் ரவிஷங்கர் எனும் டுவிட்டர் பயனரே பகிர்ந்திருக்கின்றார். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே ஆளில்லாமல் ஓடும் வாகனங்கள் நகரங்களுக்குள் இயங்க நாம் பார்த்திருப்போம். இத்தகைய செயலே முதல் முறையாக இந்தியாவில் தற்போது அரங்கேறி இருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஏனெனில் இது ஓர் இந்திய தயாரிப்பு தன்னாட்சி வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். சமீபத்திலேயே இதனை தயாரிப்பு நிறுவனமான மைனஸ் ஜீரோ (Minus Zero) வெளியீடு செய்தது. இசட்பாட் எனும் பெயரில் இந்த வாகனத்தை நிறுவனம் வெளியீடு செய்தது. வெகுவிரைவில் பொது பயன்பாட்டிற்கு இந்த வாகனம் வர இருக்கின்றது.
இந்த நிலையிலேயே பெங்களூருவில் இசட்பாட் (zPod) சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்ட இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அடாஸ் போன்ற அம்சங்களும் இசட்பாட்-இல் வழங்கப்பட்டு உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆனால், சோகம் என்னவென்றால் இந்த வாகனத்தை உற்பத்தி செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது அறியாத ஒன்றாக இருக்கின்றது. அதேவேளையில், தன்னுடைய தன்னாட்சி தொழில்நுட்பத்தை வேறு வாகனங்களுக்கு பொருத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகையால், பிற வாகனங்களுக்கு விற்பனைக்கு வழங்கும் பொருட்டே தன்னுடைய தன்னாட்சி தொழில்நுட்பத்தை நிறுவனம் தயாரித்து இருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. மைனஸ் ஜீரோ உருவாக்கி இருக்கும் இசட்பாட் வாகனத்தில் வழக்கமான வாகனங்களில் காணப்படுவதைப் போன்ற எந்தவொரு மேனுவல் கன்ட்ரோல்களும் இடம் பெற்றிருக்காது.
அதாவது, ஸ்டியரிங் வீல், பிரேக், ஆக்சலரேஷன் மற்றும் கிளட்ச் என எந்த முக்கிய அம்சங்களும் அதில் இருக்காது. அவற்றிற்கு பதிலாக திரை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாகவே புறப்படும் இடம், போக வேண்டிய ரூட் என அனைத்தையும் கட்டளையாக வாகனத்திற்கு வழங்க வேண்டும்.
இதன்படியே வாகனம் பயணிகளை உரிய இடத்திற்கு சென்று சேர்த்துவிடும். இந்த வாகனத்தை பிரத்யேகமாக உள்-வளாக பயன்பாட்டை மையக் கருத்தாகக் கொண்டு நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. உதாரணமாக, ஐஐடி கேம்பஸ், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இசட்பாட் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி உயிரியல் பூங்கா மற்றும் ரயில் நிலையங்களில் பயணிக்க பேட்டரி வாகனங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு பதிலாக இந்த வாகனங்களை பயன்படுத்த முடியும். இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட தன்னாட்சி எலெக்ட்ரிக் காரே பெங்களூரு சாலைகளில் சமீபத்தில் வலம் வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








