பத்து பைசாக்கு தேறாத மாற்றத்துக்கு இவ்ளோ சதவீதம் இன்சூரன்ஸை ஏத்துவாங்களா.. இந்த மாடிஃபிகேஷனே வேண்டாம்பா!!
வெளி உலகின் பார்வைக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என நினைக்காதவர்களைகூட பார்த்துவிட முடியும். ஆனால், வாகனங்களை அலங்காரம் செய்ய விரும்பாத உரிமையாளர்களைப் பார்ப்பது மிகவும் கடினமானதாக இருக்கின்றது. அதிலும், தன்னைவிட தான் பயன்படுத்தும் வாகனம் மிகுந்த அழகானதாகவும், பார்வையாளர்களை உடனே கவர கூடியதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களே மிகவும் அதிகம்.
அவ்வாறு, நாம் ஆர்வத்துடன் செய்யும் அலங்காரங்கள் சில அந்த வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை, அதாவது, கட்டணத்தை உயர்த்திவிடும் என்பதை நம்மில் பலர் தெரிந்திருப்பதே இல்லை. "என்ன, சொல்றீங்க காரை அழகுப்படுத்த செய்யப்படும் அலங்காரம் காரின் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்திவிடுமா" என நீங்கள் ஷாக்காகலாம்.

இதுகுறித்து நீங்கள் அஞ்சவே தேவையில்லை. நாம் நம் காரை வெளி உலகின் பார்வைக்காக அழகுப்படுத்த வேண்டி செய்யும் ஒவ்வொரு மாற்றங்களும் அந்த காரின் இன்சூரன்ஸ் பிரீமியத்தை ஏற்றவே செய்கின்றன. அந்தவகையில், எந்தெந்த செயல்கள் எல்லாம் காரின் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாடிஃபிகேஷன் என்று போனாலே அது உங்களின் காரின் பிரீமியத்தை உயர்த்தவே செய்யும். குறிப்பாக, ஆர்டிஓ-வின் அனுமதியில்லா வெளிப்புற சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பாகனங்களை வாங்கி பயன்படுத்தும்போது தானாகவே பிரீமியம் கட்டணம் உயர்ந்துவிடுகின்றது. சில நேரங்களில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு காப்பீட்டை கிளைம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. ஆகையால், மாடிஃபிகேஷனை தவிர்ப்பதே பெஸ்ட்.

சீட் கவரை மாற்றுதல்: சீட் கவரை மாற்றுவதாலும் காரின் பிரீமியம் உயரும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கப்படும் காரின் பிரீமியமான லுக்கை உயர்த்தும். இதேபோல், நாம் செலுத்தும் இன்சூரன்ஸ் கட்டணத்தின் பிரீமியத்தையும் அது சுமார் 16 சதவீதம் வரை உயர்த்த செய்யும்.
மின் விளக்கை மாற்றுவது: பேட்டரியின் மின் சக்தியை குறைவாக பயன்படுத்தும் என்கிற காரணத்திற்காகவும், வெளிச்சம் தரும் என்பதற்காகவும் ஒரு சிலர் தங்களுடைய கார்களில் எல்இடி லைட்டுகளை சேர்க்கின்றனர். இதுவும் உங்களின் பிரீமியத்தை உயர்த்தக் கூடிய ஓர் செயலாகும். சுமார் 12 சதவீதம் வரை இந்த மாற்றம் உங்கள் காரின் இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

பெயிண்டிங் மற்றும் ஸ்டிக்கர்களை மாற்றுவது: இருப்பதிலேயே இந்த வேலையை செய்தால்தான் உங்கள் வாகனத்தின் பிரீமியம் அதிகமாக உயரும் என எச்சரிக்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள். சுமார் 36 சதவீதம் வரை நீங்கள் உங்கள் காரின் பெயிண்டை மாற்றினால் உயருமாம். இதேபோல், டீகேலேச் செய்வதனாலும் இன்சூரன்ஸ் பிரீமியம் 22 சதவீதம் வரை உயரும் அபாயம் இருக்கின்றது.
அலாய் வீல் மற்றும் அகலமான டயரை மாற்றுதல்: இதனாலும் உங்கள் காரின் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர நேரிடலாம். இந்த செயல் சுமார் 8 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர்த்தும் என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள். அதேநேரத்தில் ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் அலாய் மிகவும் அபாயமானவை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

ஏர் ஃபில்டர்: ஒரு சில வாகன உரிமையாளர்கள் தங்களின் கார்களில் மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக ஆஃப்டர் மார்க்கெட்டில் அங்கீகரிக்கப்படாத ஏர் ஃபில்டர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த செயலும் உங்கள் காரின் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தும். குறிப்பாக, 25 சதவீதம் வரை இதனால் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஃப்டர் மார்க்கெட் எக்சாஸ்ட்: அதிக செயல்திறனை வெற வேண்டும் என்பதற்காகவும், சாலையில் செல்லும் தங்களின் கார்களில் இருந்து அசூர தனமான சப்தம் வெளியேற வேண்டும் என்பதற்காகவும் ஒரு சிலர் எக்சாஸ்ட்டை மாற்றுவிடுகின்றனர். இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தின் பிரீமிய தொகையை உயர்த்தக் கூடிய செயல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

பாடி பேனலை மாற்ற வேண்டாம்: ஒரு சிலர் தங்களுடைய காரின் கவர்ச்சியான தோற்றத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக வெளிப்புற சந்தையில் இருந்து பாடி பேனல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். உங்கள் காரின் கவர்ச்சியான தோற்றம் அதிகரிப்பதைப் போலவே இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையும் அதிகரிக்கின்றது.
சுமார் 66 சதவீதம் வரை இன்சூரன்ஸ் பிரீமியம் உயரக் கூடும். வழக்கமாக 10 ஆயிரம் மட்டுமே இன்சூரன்ஸ் செலுத்துவீர்கள் என்றால் இந்த மாற்றம் உங்கள் காரின் இன்சூரன்ஸை 16 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர செய்துவிடும். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் பாடி பேனல்களை மட்டும் மாற்றிவட வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதேபோல், கூடுதலாக காரில் ஸ்பாய்ளர், பிரேக் மற்றும் சஸ்பென்ஷனை அப்கிரேட் செய்தல் மற்றும் டர்போ சார்ஜிங் அல்லது சூப்பர் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களை சேர்ப்பதனாலும் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர நேரிடுகின்றது. ஆகையால், மேலே பார்த்த எந்த மாற்றத்தையும் உங்கள் காரில் செய்யாமல் இருப்பதே மிக சிறந்தது. அதுமட்டுமில்லைங்க, வேறு எந்த மாடிஃபிகேஷனையும் செய்ய வேண்டாம் என்பதே எங்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications









