இந்தியர்களுக்கு ஜாக்பாட் ரெடியாகிட்டு இருக்கு! ஜெர்மானியர்களுக்கு அடுத்தபடியாக நாமதான் அந்த கொடுத்து வச்சவங்க!
டெஸ்லாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காரின் விலை எவ்வளவு இருக்கும்? அதன் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனம் ஜெர்மனி சந்தைக்காக ஓர் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த காரையே அது இந்தியாவிலும் டெஸ்லா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படும் அந்த டெஸ்லாவின் தயாரிப்பு 25 யூரோக்களுக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இப்போதே மலிவு விலை எலெக்ட்ரிக் உற்பத்தி பணிகள் ஆரம்ப கட்டத்தை எட்டி இருக்கின்றது. வெகு விரைவில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்று விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலில் ஜெர்மானியச் சந்தையிலும், அதற்கு அடுத்தபடியாகவே இந்தியாவிலும் அது விற்பனைக்குக் களமிறக்கப்படும் என மணிகன்ட்ரோல் அதன் செய்தியில் தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் அதற்கு ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் மலிவு விலை கார் என்பதால் அது குட்டியான மற்றும் இரண்டு கதவுகளை மட்டுமேக் கொண்ட காராக அது எதிர்பார்க்கப்படுகின்றது.

செடான் அல்லது ஹேட்ச்பேக் இந்த இரண்டில் எந்த வகை காராக வேண்டுமானாலும் அது இருக்கலாம். நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக மாடல் 3 இருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 31 லட்சம் ஆகும். இதன் அடிப்படையிலேயே இந்தியா மற்றும் ஜெர்மனிக்கான மலிவு விலை எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் இரண்டாவது தயாரிப்பாகவே விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. முதல் மாடலாக அந்நிறுவனம் மாடல் ஒய் எனும் லக்சூரி மற்றும் பிரீமியம் அம்சங்களை மிக தாராளமாகக் கொண்டிருக்கும் கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இது பிராண்டின் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராகவும் காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த தகவலை இன்னும் டெஸ்லா தரப்பில் இருந்து உறுதிச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் ஜெர்மனியில் அதன் முதல் உற்பத்தி ஆலையைத் தொடங்கியது. ஜிகாஃபேக்டரி எனும் பெயரில் அது தொடங்கப்பட்டு இருக்கின்றது.
5 பில்லியன் யூரோக்கள் முதலீடு இதற்காக செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே ஐரோப்பாவின் முதல் மின்வாகன உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலையில் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக மாடல் ஒய்-யை அது தயாரித்து வருகின்றது. இந்த ஆலையில் வைத்தே அந்நாட்டிற்கான மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.
இதுமாதிரியான வாகனங்களுக்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஆலையே ஜெர்மானிய உற்பத்தி ஆலை ஆகும். இங்கிருந்தே ஆரம்ப கட்டத்தில் இந்தியாவிற்கு அந்நிறுவனம் சிகேடி வாயிலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதனால், சற்று அதிக விலையைக் கொண்டதாக நமக்கு அது காட்சியளிக்கும். அதேவேளையில், இந்தியாவில் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கும் பட்சத்தில் பெயரிடப்படாத அந்த எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவான விலையைக் கொண்டதாக அது இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. இதற்கு சான்றாக டாடாவின் நெக்ஸான் இவி இருக்கின்றது. இதுவே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாகும். இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த எலெக்ட்ரிக் காராகவும் அது காட்சியளிக்கின்றது. இதுமாதிரியான கார்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








