செடான் கார்களின் விற்பனை அதிகரிக்க அதிசயம் நடந்தா தான் உண்டு - மாருதி சுஸுகியே சறுக்கும் பிரிவு இதுதான்!!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி கார்களுக்கே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். அதேநேரம் உயரம் குறைவான செடான் கார்கள் எதுவும் விற்பனை ஆகுவதில்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை பெரிதும் குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கு கடந்த 2023 பிப்ரவரி மாத செடான் கார்கள் விற்பனை நிலவரம் சரியான சாட்சியாகும். ஏனெனில் இந்திய சந்தையில் பெரும்பாலான செடான் கார்களின் விற்பனை ஆனது 2022 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில், கடந்த பிப்ரவரியில் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் தற்போதைக்கு அதிகப்படியாக விற்பனையாகும் ஒரே செடான் காரான மாருதி சுஸுகி டிசைரின் விற்பனை 2022 பிப்ரவரியை விட கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் 17,438 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 16,798 டிசைர் கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது, டிசைர் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 3.67% குறைந்துள்ளது. ஆனால் உண்மையில், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏறக்குறைய 5,500 டிசைர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதை சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 11,317 டிசைர் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.
இந்தியாவில் மொத்த செடான் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகியின் இந்த சப்-4 மீட்டர் செடான் காரின் பங்கு மட்டும் 47.47% ஆகும். அதாவது செடான் காரை வாங்க விரும்பும் இருவர்களில் ஒருவரது தேர்வு டிசைரை நோக்கியே உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த பிப்ரவரியில் டிசைரின் விற்பனை குறைந்துள்ளது என்றாலும், இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ள ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் விற்பனை ஆனது 2022 பிப்ரவரி உடனும் சரி, 2023 ஜனவரி உடனும் சரி நன்கு முன்னேறி உள்ளது.

கடந்த பிப்ரவரியில் விற்கப்பட்ட அவ்ரா கார்களின் எண்ணிக்கை 5,524 ஆகும். அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் 3,668 அவ்ரா கார்களும், இந்த ஆண்டின் முதல் ஜனவரி மாதத்தில் 4,634 அவ்ரா கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள ஹோண்டா அமேஸின் விற்பனையும் கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த பிப்ரவரியில் சற்று அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த பிப்ரவரியில் 4,123 அமேஸ் கார்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், 2022 பிப்ரவரியில் 3,405 அமேஸ் கார்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இவ்வாறு ஹோண்டா அமேஸ் கார்களின் விற்பனை முன்னேற்றம் காண்கிறதே என நாம் சந்தோஷப்பட்டாலும், கடந்த 2023 ஜனவரி மாதத்தில் 5,580 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தனவே என நினைக்கும்போது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

இவை தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-3 செடான் கார்களாகும். இவற்றிற்கு அடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் டாடா டிகோர் மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் உள்ளன. இதில் டாடா டிகோர் செடான் கார்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,064 யூனிட்களும், ஹோண்டா சிட்டி 1,963 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. இவை இரண்டின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது.
6வது மற்றும் 7வது இடங்களில் ஃபோக்ஸ்வேகன்- ஸ்கோடா கூட்டணியில் உருவாக்கப்பட்ட செடான் கார்களான விர்டுஸ் மற்றும் ஸ்லாவியா உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,563 மற்றும் 1,274 ஆகும். இதில் விர்டுஸ் கார்கள் 2023 ஜனவரியில் 1,379 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டாப்-10 வரிசையில் கடைசி 3 இடங்களில் மாருதி சுஸுகி சியாஸ் (792), ஸ்கோடா சூப்பர்ப் (90) மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா (82) செடான் கார்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








