கப்பல் மாதிரி இருக்கு! எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் வந்தாச்சு! எல்லாரும் செல்பி எடுத்து சீன் போட போறாங்க!
டபுள் டக்கர் பஸ்களில் (Double-decker Bus) பயணிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் அனைத்து நகரங்களிலும் டபுள் டக்கர் பஸ்களை நம்மால் பார்க்க முடியாது. இந்தியாவை பொறுத்தவரை மும்பை (Mumbai) நகரம் டபுள் டக்கர் பஸ்களுக்கு பெயர் பெற்றது.
ஆனால் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வழக்கமான டபுள் டக்கர் பஸ்களைதான் மும்பையில் நாம் பார்த்திருப்போம். இந்த சூழலில் அவற்றுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை (Electric Double-decker Bus) மும்பை நகரம் தற்போது பெற்றுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்படும் இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமை மும்பைக்கு கிடைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் ஏசி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டுள்ளன.

ஒரு வழியா வந்தாச்சு!
மும்பை நகரில் பெஸ்ட் (BEST - Brihanmumbai Electric Supply & Transport) அமைப்புதான் பொது போக்குவரத்தை நடத்தி வருகிறது. அதன் பஸ்கள் தொகுப்பில் தற்போது எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல மாத தாமதங்களுக்கு பிறகு இந்த இணைப்பு ஒரு வழியாக தற்போது நிகழ்ந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஐவி22 (EiV 22) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் அழைக்கப்படுகின்றன.
வெயிட்டான பேட்டரி!
வரும் மார்ச் மாத இறுதிக்குள் மும்பை சாலைகளில் 20 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக மும்பை சாலைகளில் 200 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை காண முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில், 231 kWh திறன் உடைய லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தபா சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் ஓடுமா?
வெறும் 1.5 முதல் 3 மணி நேரத்திற்கு உள்ளாக இதனை சார்ஜ் செய்து விட முடியும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) நிறுவனம்தான், இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை உற்பத்தி செய்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆலையில் இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதுல இவ்ளோ வசதிகள் இருக்கா!
அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஸ்விட்ச் மொபிலிட்டி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஏசி மட்டுமல்லாது, டிஜிட்டல் டிக்கெட், சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே என ஏராளமான வசதிகள், இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எங்கே உள்ளன? என்பதை பயணிகள் 'லைவ் டிராக்' செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கும் வருமா?
அத்துடன் அவசர சூழல்களில் பயன்படுத்துவதற்கு 'பேனிக் பட்டன்' வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில் சுமார் 65 பயணிகள் அமர்ந்து கொண்டு பயணிக்க முடியும். அதே நேரத்தில் நின்று கொண்டு பயணம் செய்பவர்களை கணக்கில் கொண்டால், சுமார் 100 பேர் வரை செல்ல முடியும். இதுபோன்ற எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை தமிழ்நாட்டிலும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.
கவர்மெண்ட் கன்சிடர் பண்ணணும்!
தமிழ்நாட்டில் இன்னும் சொல்லிக்கொள்ளும் வகையில் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது ஏமாற்றமான ஒரு விஷயம்தான். ஓட்டை உடைசல் டீசல் பேருந்துகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. எனவே அவற்றுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் களமிறக்கினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதுடன், பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாநில அரசு கூடிய விரைவில் நிறைவேற்றும் என நாம் நம்பலாம்.


Click it and Unblock the Notifications








