2023 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.57.90 லட்சம்
ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் காரின் லாங் வீல்பேஸ், அதாவது நீளம் அதிகம் கொண்ட மாடலாக கிரான் லிமௌசைன் விளங்குகிறது. இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2023 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.57.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 330 எல்.ஐ எம் ஸ்போர்ட் மற்றும் 320 எல்.டி எம் ஸ்போர்ட் என்ற 2 விதமான வேரியண்ட்களில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 330 எல்.ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை தான் ரூ.57.90 லட்சம் ஆகும். 320 எல்.டி எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59.50 லட்சம் ஆகும். 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கிய அப்டேட்களாக காரின் வெளிப்பக்க தோற்றம் மெருக்கேற்றப்பட்டிருப்பதுடன், உட்பக்க டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு பிஎம்டபிள்யூவின் வளைவான டிஸ்பிளே செட்-அப் வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் காரின் முகப்பு பகுதியானது புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு அப்கிரேட் ஆகியுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் முன்பை காட்டிலும் மெல்லியதான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹெட்லைட்களை சுற்றிலும் தலைக்கீழான L-வடிவில் டிஆர்எல்-கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் அவுட்டரில் இருக்கும் டிஆர்எல்-கள் டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 'கிட்னி' வடிவிலான க்ரில்கள் தடிமனான க்ரோம் அவுட்லைன்களை கொண்டுள்ளன. முன்பக்க பம்பரின் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, புதிய 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரின் முன் பம்பர் ஆனது முன்பை காட்டிலும் பெரிய அளவிலான ஏர் இண்டேக்குகளை கொண்டுள்ளது. முன் பம்பர் மட்டுமின்றி காரின் பின்பக்க பம்பரின் டிசைனும் திருத்தப்பட்டுள்ளது. அப்படியே காரின் உட்பக்கத்திற்கு சென்றால், 2023 3 சீரிஸ் கிரான் லிமௌசைனில் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ள வளைவான டிஸ்பிளே நம்மை வரவேற்கிறது.
இந்த வகையில் முன்பை காட்டிலும் அளவில் பெரியதாக மாறியிருக்கும் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே ஆனது பிஎம்டபிள்யூ ஒ.எஸ் 8 -இல் இயங்கக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவையும் ஏற்கும். இன்ஃபோடெயின்மெண்ட் திரை உடன் இணைக்கப்பட்டுள்ள ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தில் மொத்தம் 16 ஸ்பீக்கர்கள் அடங்குகின்றன. மறுப்பக்கம், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க 12.3 இன்ச் திரை உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

இந்த ஓட்டுனருக்கான திரைக்கு முன் புதிய எம் ஸ்டேரிங் சக்கரமும், மைய கன்சோல் பகுதியில் அளவில் சிறியதான கியர் செலக்டரும் நம்மை வசீகரிக்கின்றன. புதிய 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரில் 3-நிலைகளில் செயல்படக்கூடிய ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி ஸ்டாண்டர்ட் அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, காரின் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் புதிய 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரும் வழக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளையே தொடர்ந்துள்ளது.
இதில், 330 எல்.ஐ வேரியண்ட்டில் வழங்கப்படும் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 255 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 320 எல்.டி வேரியண்ட்டில் பொருத்தப்படும் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.


Click it and Unblock the Notifications








