இனி ஹோண்டா சிட்டி கூட ஓரமா தான் நிக்கனும்... சூப்பரான அப்டேட்கள் & தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா!!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சந்தையில் புதிய வெர்னா கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது. அவற்றை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
புதிய ஹூண்டாய் வெர்னா செடான் கார் வருகிற மார்ச் 21ஆம் தேதி உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. தற்போதைய வெர்னா காரை காட்டிலும் நீளமானதாகவும், அளவில் பெரியதாகவும் கொண்டுவரப்படும் புதிய வெர்னா அதன் உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நம் நாட்டில் துவங்கப்பட்டு விட்டன.

முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய வெர்னா காரை டெலிவிரி செய்யும் பணிகள் வரும் ஏப்ரல் மாத மத்தியில் துவங்கப்படும் என சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் புதிய வெர்னா கார் குறித்த புதியதொரு டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில்தான் புதிய வெர்னா கார் குறித்த விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.
அந்த தகவல்களின்படி பார்க்கும்போது, இப்போதைய வெர்னா காரை காட்டிலும் புதிய வெர்னா 95மிமீ நீளமானது மற்றும் 36மிமீ அகலமானது. நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் 70மிமீ அதிகரித்துள்ளது. வீல்பேஸ் எனப்படும் அந்த அளவானது புதிய வெர்னாவில் 2,670மிமீ ஆகும். அதேபோல் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியும் 48 லிட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 529 லிட்டர்களாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் உட்பக்க கேபின் ஆனது கருப்பு & பழுப்பு என ட்யூவல்-டோன் நிறத்தில் வழங்கப்பட உள்ளது. லெதரேட் ஆல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் கேபினில் டேஷ்போர்டு பகுதியில் ஏராளமான மென்மையான டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஏகப்பட்ட அப்டேட்களும் புதிய வெர்னாவில் எதிர்பார்க்கப்பட்டன.
நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, கூல்டு க்ளோவ் பாக்ஸ், பல விதங்களாக பயன்படுத்தி கொள்ளக்கூடிய மைய கன்சோல் பகுதி, பெரிய அளவில் டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஏகப்பட்டவை புதிய வெர்னாவில் சேர்க்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின்களுள் ஒன்றுடன் புதிய தலைமுறை வெர்னா காரை வாங்கலாம்.

இந்த இரு என்ஜின்களும் ரியல்-டிரைவ் எமிஷனுக்கு இணக்கமானவை. அதலால் இவை இரண்டும் இ20 எரிபொருளை ஏற்கக்கூடியவை. அதாவது என்ஜின்களுடன் ஸ்டாண்டர்டான கியர்பாக்ஸ் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், கூடுதல் தேர்வாக நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் சிவிடி-யும், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி-யும் வழங்கப்பட உள்ளன.
ஹூண்டாய் வெர்னா காருக்கு விற்பனையில் மாருதி சுஸுகி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் புதிய ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக விளங்குகின்றன. புதிய வெர்னா காரை உற்பத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே சென்னையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுவிட்டது. இங்கு தயாரிக்கப்படும் வெர்னா கார்கள்தான் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications