அமெரிக்க நிறுவனத்தின் ஆலையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்! நம்ம டாடாவுக்கு பயங்கர செக் காத்திருக்கு!
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று ஜென்ரல் மோட்டார்ஸ் (General Motors). மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள தாலேகான் (Talegaon) என்னும் பகுதியில் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.
எனவே இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஹூண்டாய் (Hyundai), ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாலேகான் தொழிற்சாலையை தற்போது கையகப்படுத்தியுள்ளது. வரும் 2025ம் ஆண்டில் இருந்து, ஹூண்டாய் நிறுவனம் இங்கு கார்களை உற்பத்தி செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக 2வது தலைமுறை ஹூண்டாய் வெனியூ (Second-generation Hyundai Venue) கார்தான், இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள முதல் கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் வெனியூ இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் (Kia Sonet), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300), டாடா நெக்ஸான் (Tata Nexon), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் தற்போது மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். அத்துடன் ஹூண்டாய் வெனியூ காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. எனவே இது நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை (Price) 7.77 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.18 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் 2வது தலைமுறை மாடலை, ஹூண்டாய் நிறுவனம் தாலேகான் ஆலையில் உற்பத்தி செய்யும் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது Q2Xi என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் i என்பது India என்பதை குறிக்கிறது. போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரை மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே 2வது தலைமுறை வெனியூ காரில் ஏராளமான மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்தியிருப்பதன் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். இது போட்டி நிறுவனங்களை சமாளிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதவி செய்யும். குறிப்பாக டாடா நிறுவனம் சமீப காலமாக வழங்கி வரும் போட்டியை, ஹூண்டாய் இதன் மூலம் எளிதாக சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








