மாருதி வேகன்ஆர் காரை இனி இப்படிப்பட்ட பெயிண்ட்டிலும் வாங்கலாம் - ஷோரூம்களுக்கு வர ஸ்டார்ட் ஆயிடுச்சு!!
மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அதன் அனைத்து கார்களிலும் புதிய கருப்பு எடிசனை அறிமுகப்படுத்தியது. அதில் வேகன்ஆரின் பிளாக் எடிசனை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியா போன்ற மிக பெரிய நாட்டில் கார்கள் விற்பனையில் நம்பர் ஒன்னாக இருப்பது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் மாருதி சுஸுகி அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தனது நிறுவனத்தின் கார்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பிளாக் எடிசன்களை சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, மாருதி சுஸுகியின் பிளாக் எடிசன் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக டீலர்ஷிப் ஷோரூம் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளன. இந்த வகையில் சமீபத்தில் முதல் பிரெஸ்ஸா பிளாக் எடிசன் கார் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்திருந்தது. தற்போது, வேகன்ஆர் பிளாக் எடிசன் வேறொரு டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
புதிய வேகன்ஆர் பிளாக் எடிசனுக்கு மிட்நைட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இதே பெயிண்ட் தான் மற்ற மாருதி சுஸுகி பிளாக் எடிசன் கார்களிலும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரத்யேக மிட்நைட் பெயிண்ட்டை தவிர்த்து வேகன்ஆர் காரின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் இல்லை. இவ்வாறான பிளாக் எடிசன் கார்களை மாருதி சுஸுகி மட்டுமின்றி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் போன்ற மற்ற முன்னணி கார் நிறுவனங்களும் அவ்வப்போது அறிமுகம் செய்வது உண்டு.
கடந்த காலங்களில் விற்பனைக்குவந்த அவ்வாறான பிளாக் எடிசன் கார்களில் வெளிப்பக்கத்தை போன்று காரின் உட்பக்க கேபினும் அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்படும். ஆனால் மாருதி சுஸுகியின் புதிய வேகன்ஆர் பிளாக் எடிசனில் வெளிப்பக்கம் மட்டுமே கருப்பு நிற பெயிண்ட்டில் உள்ளதே தவிர்த்து, உட்பக்கம் வழக்கம்போல் கருப்பு - பழுப்பு என்ற ட்யூயல்-டோனிலேயே தொடரப்பட்டுள்ளது.
வேகன்ஆரில் பிளாக் எடிசனை டாப் வேரியண்ட்களான இசட்.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ+ -இல் மட்டுமே பெற முடியும். மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சி தருவது, வேகன்ஆர் பிளாக் எடிசனின் டாப் இசட்.எக்ஸ்.ஐ வேரியண்ட் ஆகும். இந்த விலைமிக்க வேரியண்ட்டில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களாக 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டேரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ & ப்ளூடூத் கண்ட்ரோல்கள், ரிமோட் செண்ட்ரல் லாக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வேகன்ஆரின் டாப் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த கே12சி ட்யூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் பெறலாம். வேகன்ஆரின் விலை குறைவான வேரியண்ட்களில் பொருத்தப்படும் சிறிய 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் பிளாக் எடிசனை பெற முடியாது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
புதிய மிட்நைட் கருப்பு நிறத்தில் மாருதி வேகன்ஆர் கார் சூப்பராக உள்ளதை முதலில் கூறியே ஆக வேண்டும். ஆனால் காரின் வெளிப்பக்கத்திற்கு மட்டும் கருப்பு நிற பெயிண்ட்டை கொடுத்துவிட்டு, உட்பக்க கேபின் வழக்கம்போல் வழங்கப்பட்டு இருப்பது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. காரின் உட்பக்கத்தில் எந்த வசதியையும் புதியதாக சேர்க்க வேண்டாம். குறைந்தப்பட்சம் இருக்கைகள் மற்றும் டேஸ்போர்டிற்கு வழங்கப்படும் நிறத்தை ஆவது மாற்றி இருக்கலாம்.


Click it and Unblock the Notifications