வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு! என்னனு தெரியுமா?
கோவா மாநிலத்தில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து வாடகை வாகனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். இதன்படி வாடகைக்கு விடப்படும் கார்கள் மற்றும் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
கோவா மாநிலத்திற்கு சுற்றுலா செல்லும் பலர், வாடகைக்குதான் வாகனங்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். தற்போதைய நிலையில் அவை பெரும்பாலும் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களாக இருக்கின்றன. ஆனால் இந்த புதிய உத்தரவின்படி, வரும் ஜனவரி மாதத்தில் இருந்து வாடகைக்கு வாகனங்களை விடும் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் கோவாவில் சுற்றுச்சூழல் மாசுபடுவது கட்டுக்குள் வரும் என அம்மாநில அரசு கருதுகிறது. எனவேதான் கோவா மாநில முதல் அமைச்சர் ப்ரமோத் சவந்த் இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
கோவா மாநிலத்தில் 40 சதவீத கார்பன் உமிழ்விற்கு வழக்கமான ஐசி இன்ஜின் வாகனங்கள்தான் காரணம் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் கோவா மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கோவா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மொத்த வாகனங்களில் 30 சதவீத வாகனங்கள் வரும் 2025ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என அம்மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இங்கே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கோவாதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை நிறுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் ஆகும்.
கடந்த 2022ம் ஆண்டே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்கள் வழங்குவதை கோவா நிறுத்தி விட்டது. எனினும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசு வழங்கும் ஃபேம்-2 திட்ட மானியங்கள் இன்னும் அங்கு வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கான மானியத்தை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து விட்டது.
இதன் காரணமாக எலெக்ட்ரிக் டூவீலர்களின் விலைகள் உயர்ந்துள்ளன. எனவே மக்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மாறுவது குறைந்துள்ளது. கடந்த 2 மாத கால அளவிலான விற்பனை புள்ளி விபரங்கள் இதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இது தற்காலிகமானதுதான் என்பது துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்து. எனவே கூடிய விரைவில் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவே மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சமீப காலமாக அரசு மானியங்கள் வழங்குவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் போதுமான அளவு ஏற்பட்டு விட்டது.
எனவே மானியங்கள் குறைக்கப்பட்டாலும் அல்லது நிறுத்தப்பட்டாலும் கூட, வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதே எங்கள் கருத்து. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் படிப்படியாக அதன் செல்வாக்கை இழப்பற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








