விற்பனையை அதிகரிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு... ஹூண்டாய் ஐ10 காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய வேரியண்ட்டை ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் (Sportz Executive) என்ற பெயரில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் குறைவான விலையில் அதிக பேர் தேர்வு செய்யக்கூடிய ஹூண்டாய் கார்களுள் ஒன்றாக கிராண்ட் ஐ10 நியோஸை சொல்லலாம். இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கிராண்ட் ஐ10 நியோஸில் புதிய ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட்கள் வரிசையில் மத்திய-நிலை வேரியண்ட்டாக இடம்பெற்றுள்ளது. மேனுவல் மற்றும் ஏஎம்டி என 2 விதமான கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் தேர்வில் ரூ.7.16 லட்சமாகவும், ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் ரூ.7.70 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஐ10 நியோஸின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் தானியங்கி ஏசியை இந்த புதிய வேரியண்ட் இழந்துள்ளது. மற்றப்படி, 15-இன்ச் அலாய் சக்கரங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே, சாவி இல்லா நுழைவு, பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி துளைகள் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் வழக்கமாக வழங்கப்படும் அம்சங்கள் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேரியண்ட்டிலும் தொடரப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த புதிய வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகள், இஎஸ்சி மற்றும் ஹில்-ஹோல்ட் வசதிகள் இடம் பெற்றுள்ளன. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் மற்ற வேரியண்ட்களில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் இந்த புதிய வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் ஏற்கனவே கூறியதுப்படி, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கும். கிராண்ட் ஐ10 நியோஸ் காரை சிஎன்ஜி தேர்விலும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால் புதிய ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேரியண்ட்டை அத்தகைய சிஎன்ஜி தேர்வில் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, எதிர்காலத்தில் இந்த வேரியண்ட்டில் சிஎன்ஜி தேர்வு வழங்கப்படலாம்.

புதிய ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேரியண்ட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.7.16 லட்சம் விலை ஆனது கிராண்ட் ஐ10 நியோஸின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டை காட்டிலும் ரூ.4,000 குறைவாகும். ஏனெனில் அந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.7.20 லட்சமாக உள்ளது. இந்த ரூ.4,000 குறைந்த விலைக்கு ஏற்பவே புதிய ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ஏசி-க்கு பதிலாக மேனுவல் ஏசி/ ஹீட்டர் செட்அப் வழங்கப்பட்டுள்ளது.
விற்பனையில் கிராண்ட் ஐ10 நியோஸுக்கு மாருதி சுஸுகி இக்னிஸ், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டாடா டியாகோ உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. கிராண்ட் 10 நியோஸில் மட்டுமின்றி, ஐ20 ஹேட்ச்பேக் காரிலும் சில பல மாற்றங்களை ஹூண்டாய் செய்துள்ளது. ஐ20 காரில் புதிய வேரியண்ட் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, வழக்கமான ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் இருந்து ஆட்டோமேட்டிக் ஏசி வசதியை நீக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








