லிட்டருக்கு 23கிமீ மைலேஜ் தரும் புது மாருதி காரின் தோற்றம்!! அறிமுக தேதியை தான் நாடே எதிர்பார்த்துட்டு இருக்கு
கார் வாங்க திட்டமிட்டு வருபவர்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மீது உள்ளது. இந்தியாவில் மிக அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்று ஸ்விஃப்ட் ஆகும். இந்தியாவின் மிடில்-கிளாஸ் மக்களின் கார் என்றுகூட இதனை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு, அளவில் சிறியதாக, குறைவான விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதனாலேயே, மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் 2024இல் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஸ்விஃப்ட் கார் தான் அடுத்த 2024இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஸ்விஃப்ட் கார் குறித்து ஜப்பானில் இருந்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில் காட்சித் தருபவைகளில் பெரும்பாலானவை ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்கள் ஆகும். ஆனால், 2024 ஸ்விஃப்ட் காரின் விலை குறைவான வேரியண்ட்களின் படங்கள் அவ்வளவாக கிடைக்கவில்லை. அத்தகைய விலை குறைவான ஸ்விஃப்ட் காரின் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஜப்பானில் ஸ்விஃப்ட் எக்ஸ்.ஜி என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 2024 ஸ்விஃப்ட் காரின் வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டாக இது விற்பனை செய்யப்படலாம். விலை குறைவான வேரியண்ட் என்பதால், காருக்கு வெளியே க்ரில் மற்றும் முன் & பின்பக்க பம்பர்களில் க்ரோம் பிளாஸ்டிக்குகள் இல்லை. இதனை இணையத்தில் வெளியாகியுள்ள இந்த படங்களில் காணலாம்.

அதேபோல், காருக்கு பின்னால் ஸ்பாய்லர், டோர் புரோடெக்டர்ஸ் போன்ற எதுவும் இல்லை. சக்கரங்கள் 15 இன்ச்சில் இரும்பு சக்கரங்களாக உள்ளன. புதிய ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட்கள் அனைத்திலும் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த விலை குறைவான வேரியண்ட்டிலும் அந்த விளக்குகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பனி அடர்ந்த சாலையில் காரை ஓட்டுவதற்கு உதவியாக இருக்கும் ஃபாக் விளக்குகள் இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் இல்லை. காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரத்தில் க்ரோம் இன்செர்ட்கள் எதுவும் இல்லை. காரின் உட்பக்க கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விலைமிக்க வேரியண்ட்களில் சில்வர் & கருப்பு நிறங்களில் வழங்கப்படுகிறது.

9.0-இன்ச் டிஸ்பிளே உடன் சுஸுகி கனெக்ட் டெலிமேட்டிக்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த விலை குறைவான ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானில், கூடுதலாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.70,000 செலுத்தினால் 6 ஸ்பீக்கர்கள் கிடைக்கும் என சுஸுகி அறிவித்துள்ளது.
360-டிகிரி கேமரா, லெவல்-2 அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் எதுவும் இந்த ஸ்விஃப்ட் காரில் இல்லை. ஜப்பானில் ஸ்விஃப்ட் எக்ஸ்ஜி வேரியண்ட்டில் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கிடைக்கும். சுஸுகி புதியதாக உருவாக்கிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் இந்த ஸ்விஃப்ட் வேரியண்ட்டில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் இந்த ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுவதில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்டு உள்ளவை அனைத்தும் ஜப்பான் நாட்டில் சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை குறைவான எக்ஸ்ஜி வேரியண்ட்டில் வழங்கப்பட்டு இருப்பவை ஆகும். அதுவே, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஸ்விஃப்ட் காரில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்களுக்கு தெரிந்தவரையில், மேற்கூறப்பட்டுள்ள அம்சங்களில் பெரும்பாலானவை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









