டொயோட்டா களமிறக்கும் புதிய காருக்கு தான் எல்லாரும் வெயிட்டிங்!! டொயோட்டாவில் இது தனி ரகமா இருக்கும்!
டொயோட்டா காம்ரி (Toyota Camry) கார் நவம்பர் 14இல் புத்துணர்ச்சியான தோற்றத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், டொயோட்டா காம்ரி காரை பற்றியும், இந்த புதிய காம்ரி கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்பதை பற்றியும் இனி முழுமையாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை (நவம்பர் 14) 2023ஆம் ஆண்டிற்கான ஆட்டோ கண்காட்சி நடைபெறவுள்ளது. பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த கண்காட்சியில் டொயோட்டா நிறுவனம் சார்பில் 9ஆம் தலைமுறை காம்ரி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய காம்ரி கார் தொடர்பான டீசர் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த டீசர் படங்களின் மூலம், புதிய காம்ரி காரை பற்றி சில விபரங்களை நம்முடன் டொயோட்டா நிறுவனம் பகிர்ந்துக் கொண்டுள்ளது. அவையாவன, புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் எலக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அத்துடன், இந்த கார் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய காம்ரி காரின் பின்பக்கத்தில் 'AWD HEV' என்பது குறிப்பிடப்பட்டு உள்ளதை தற்போது வெளியிட்டுள்ள டீசர் படங்களில் டொயோட்டா வெளிக்காட்டி உள்ளது. டொயோட்டா காம்ரி, ஓர் எஸ்யூவி ரக கார் கிடையாது, இது ஒரு செடான் ரக கார் ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலேயே தற்சமயம் எஸ்யூவி ரக கார்களுக்கே சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது.

இருப்பினும், டொயோட்டா காம்ரி கார்களின் விற்பனை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சிறப்பாக உள்ளது. புதிய டொயோட்டா காம்ரியில் ADAS, HUD, புதிய டிரைவர் பாதுகாப்பு பேக்கேஜ்கள் மற்றும் பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்கிறோம். அத்துடன், காம்ரி காரின் உடல் அமைப்பையும் டொயோட்டா நிறுவனம் சற்று மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டாவின் புதிய டிஎன்ஜிஏ-கே பிளாட்ஃபாரத்தில் புதிய 9ஆம் தலைமுறை காம்ரி உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமான 2.5 லிட்டர் 4-சிலிண்டர் ஹைப்ரீட் என்ஜின் தான் புதிய காம்ரியிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டார்களின் உதவியின்றி, 2.5 லிட்டர் என்ஜின் மட்டும் அதிகப்பட்சமாக 176 பிஎச்பி & 221 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக கூடுதலாக 199 பிஎச்பி & 202 என்எம் டார்க் திறனை கார் பெற முடியும். இந்த என்ஜின் அமைப்பில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினின் ஆற்றலை இந்த கியர்பாக்ஸ் காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. காம்ரி ஒன்றும் இந்திய சந்தைக்கு புதிய மாடல் கிடையாது. ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் இந்த காரை நம் நாட்டில் விற்பனை செய்துள்ளது.
முன்பு விற்பனையில் இருந்த சமயத்தில், இந்திய மார்க்கெட்டில் காம்ரி டொயோட்டாவின் சிறந்த விற்பனை கார் கிடையாது. மாதத்திற்கு 150- 200 காம்ரி கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இருப்பினும், நாளை உலகளவில் வெளியீடு செய்யப்படும் புதிய காம்ரி இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் முன்பை விட இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டொயோட்டா காம்ரி உலகளவில்தான் நாளைக்கு வெளியீடு செய்யப்பட உள்ளது, மற்றப்படி இந்தியாவில் இந்த கார் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் தற்போதைக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் புதிய காம்ரி அறிமுகம் செய்யப்படாமல் கூட போகலாம்.


Click it and Unblock the Notifications








