சாலையில் ஓடும் உல்லாச கப்பலை களமிறக்கியது டொயோட்டா! ஒரு லிட்டருக்கு இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு எம்பிவி (Luxury MPV) ரக கார் ஆகும். திரையுலகில் பல்வேறு நட்சத்திரங்களிடம் டொயோட்டா வெல்ஃபையர் கார் இருந்து வருகிறது.
மலையாளம் கடந்து, தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள மோகன்லால் (Mohanlal) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த சூழலில், வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 4வது தலைமுறை (Fourth-generation) வெல்ஃபையர் காரை, டொயோட்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Hi மற்றும் VIP என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants), 4வது தலைமுறை டொயோட்டா வெல்ஃபையர் கார் கிடைக்கும். இதில், Hi வேரியண்ட்டின் விலை (Price) 1,19,90,000 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் VIP வேரியண்ட்டின் விலை 1,29,90,000 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்பார்ம் அடிப்படையில், டொயோட்டா வெல்ஃபையர் கார் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரின் நீளம் 4,995 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் வீல்பேஸ் நீளம் 3,000 மிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரையில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன்பக்க பம்பர் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்டீரியரை (Interior) பொறுத்தவரையில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஜேபிஎல் 15 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கியமான வசதிகளாக (Features) உள்ளன. இதுதவிர புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், 6 ஏர்பேக்குகள், பனரோமிக் வியூ மானிட்டர், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அஸிஸ்ட் அலர்ட்கள் போன்றவை மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இதுதவிர அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் லேன் கீப் அஸிஸ்ட் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய டொயோட்டா சேஃப்டி சென்ஸ் தொழில்நுட்பத்தையும் இந்த கார் பெற்றுள்ளது. இவை அடாஸ் (ADAS) features வசதிகள் ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில், 2.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இது 6,000 ஆர்பிஎம்மில் 190 பிஹெச்பி பவரையும், 4,300-4,500 ஆர்பிஎம்மில் 240 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
புதிய வெல்ஃபையர் கார், ஒரு லிட்டருக்கு 19.28 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பான மைலேஜிற்கு, ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். புதிய டொயோட்டா வெல்ஃபையர் கார் மொத்தம் 3 கலர்களில் (Colours) கிடைக்கும்.
அவை பிளாட்டினம் பேர்ல் ஒயிட், ஜெட் பிளாக் மற்றும் ப்ரீசியஸ் மெட்டல் ஆகியவை ஆகும். இவை வெளிப்புற கலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரின் இன்டீரியரும் 3 கலர் ஆப்ஷன்களில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அவை சன்செட் ப்ரவுன், நியூட்ரல் பீய்ஜ் மற்றும் கருப்பு ஆகியவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டொயோட்டா வெல்ஃபையர் கார், சொகுசு வசதிகள் நிரம்பிய ஒன்றாக உள்ளதாலும், சிறப்பான மைலேஜை வழங்குவதாலும், முந்தைய மாடல்களை போலவே, வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக தொழில் அதிபர்கள், திரைத்துறையினரை இந்த புதிய மாடல் கவரலாம்.


Click it and Unblock the Notifications








