சாலையில் ஓடும் உல்லாச கப்பலை களமிறக்கிய டொயோட்டா! மெதந்து கிட்டே போகலாம்! கொஞ்சம் கூட அலுப்பே தெரியாது!
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், புத்தம் புதிய 2023 வெல்ஃபையர் (2023 Toyota Vellfire) சொகுசு எம்பிவி காரை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. TNGA-K மாடுலர் பிளாட்பார்ம் அடிப்படையில், 2023 டொயோட்டா வெல்ஃபையர் உருவாக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய லெக்ஸஸ் எல்எம் (Lexus LM) எம்பிவி காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய மாடலின் அதே பாக்ஸி டிசைன் (Design), 2023 டொயோட்டா வெல்ஃபையர் காரில் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் பழைய மாடலை காட்டிலும் புதிய மாடல் சற்று பெரியது. அத்துடன் பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலின் டிசைனில் நிறைய மாற்றங்களை டொயோட்டா நிறுவனம் செய்து அசத்தியுள்ளது.

இதன்படி டொயோட்டா வெல்ஃபையர் காரின் முன் பகுதியில் 6 ஸ்லாட்களை கொண்ட பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டொயோட்டா பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அத்துடன் புதிய மாடலில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. டிசைனை போலவே, இந்த புதிய மாடலின் உட்புறத்திலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி புதிய மாடலில் புத்தம் புதிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளதையும் நம்மால் காண முடிகிறது. பரிமாணங்களை பொறுத்தவரையில், புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரின் நீளம் 4,995 மிமீ ஆக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் வீல்பேஸ் நீளம் 3,000 மிமீ ஆக உள்ளது.

2+2+2 என்ற அமைப்பில் 2023 டொயோட்டா வெல்ஃபையர் காரில் மொத்தம் 6 பேர் பயணிக்க முடியும். அவர்கள் அனைவருக்கும் சொகுசான பயணம் கிடைக்கும் என்பது உறுதி. 2023 டொயோட்டா வெல்ஃபையர் காரில் மொத்தம் 3 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும்.
இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 180 பிஹெச்பி மற்றும் 235 என்எம் ஆகும். இதுதவிர 250 பிஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் (Petrol Hybrid) இன்ஜின் ஆப்ஷனையும் இந்த கார் பெற்றுள்ளது. இவற்றுடன் 275 பிஹெச்பி பவர் மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், சிவிடி, இ-சிவிடி மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. பழைய மாடலை போலவே, புதிய மாடலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய வெல்ஃபையர் உடன் 2023 டொயோட்டா அல்பார்டு (2023 Toyota Alphard) காரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய மாடலை காட்டிலும் பல்வேறு விதங்களிலும் மேம்பட்டதாக 2023 டொயோட்டா வெல்ஃபையர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக சொகுசான பயணத்தை எதிர்பார்க்கும் தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் ஏற்ற காராக இருக்கும்.


Click it and Unblock the Notifications








