நிஸான் செய்த இந்த சம்பவத்தால் சென்னைக்கே பெருமை! இந்த ஒத்த கார வச்சுட்டு அது போடுற ஆட்டம் இருக்கே.. வேற லெவல்!
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உற்பத்தி ஆலையை அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் நிஸான் (Nissan)-ம் ஒன்று. ஸ்ரீபெரும்பதூரில் நிறுவனத்தின் பிரமாண்ட ஆலை அமைந்திருக்கின்றது. இங்கு வைத்தே இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றிற்காக அது கார்களை உற்பத்தி செய்துக் கொண்டு இருக்கின்றது.
மேலும், நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான மேக்னைட் கார் மாடலையும் இங்கு வைத்தே (சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆலையிலேயே) நிஸான் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் உற்பத்தியிலேயே நிறுவனம் சூப்பரான சம்பவத்தை தற்போது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு லட்சமாவது யூனிட் மேக்னைட் காரை அது உற்பத்தி செய்திருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்த ஒற்றை கார் மாடலையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. வேறு எந்த கார் மாடலையும் அது நாட்டில் இப்போது விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறப்பிடத்தகுந்தது. இந்த மேக்னைட்டுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் விளைவு இப்போது அந்த கார் உற்பத்தியில் புதிய மைல் கல்லை எட்டி இருக்கின்றது. ஒரு லட்சமாவது யூனிட்டை நிறுவனம் விற்பனைக்காக உற்பத்தி செய்து வெளியேற்றி இருக்கின்றது. உற்பத்தி செய்யப்பட்ட அந்த ஒரு லட்சமாவது யூனிட் மேக்னைட் கார் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சிறப்பு புகைப்படங்கள் தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாகவே இந்த சம்பவத்தை நிஸான் மேக்னைட் செய்திருக்கின்றது. நிஸான் நிறுவனம் இந்த காரை 2020 ஆம் ஆண்டின் இறுதியிலேயே முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கியது. இவ்வளவு குறைவான காலத்தில் இவ்வளவு உற்பத்தியை பெறும் அளவிற்கு நிஸான் மேக்னைட்டிற்கு வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதற்கு அந்த காரின் மலிவு விலையும், அதிக தரமான கட்டுமானமுமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. ஆமாங்க, இந்த கார் ஓர் அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த காராகும். பாதுகாப்பு தரத்தில் நான்கு ஸ்டார்களை அது பெற்றிருக்கின்றது. இந்த தகுதியும், இதன் மலிவு விலையுமே தற்போதைய அதிக உற்பத்திக்கு காரணமாக மாறி இருக்கின்றது.

நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலையே ரூ. 5.99 லட்சம் மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுமட்டுமில்லைங்க இந்த காரில் சிறப்பு வசதிகளையும் நிஸான் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, விலை உயர்ந்த கார்களில் காணப்படும் பிரீமியம் தர அம்சங்கள் சிலவற்றை மேக்னைட்டில் வழங்கி இருக்கின்றது.
எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர மின் விளக்குகள், 8 அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கார் இணைப்பு தொழில்நுட்பம் என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் நம்மால் காண முடிகின்றது.

இதுதவிர, ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் செட்-அப்பும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பாதுகாப்பான பயணத்திற்காக இரட்டை ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை வழக்கமான தேர்வுடன் சேர்த்து இரு சிறப்பு பதிப்புகளையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கெஸா ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரெட் எடிசன் ஆகியவையே அவை ஆகும். கெஸா ஸ்பெஷல் எடிசன் ரூ.7.39 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், ரெட் எடிசன் ரூ.8.06 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் மேக்னைட்டை நடுத்தர மக்களாலும் வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகின்ற காரணத்தினாலேயே இப்போது அதனால் உற்பத்தியில் சூப்பரான சாதனையைப் படைக்க முடிந்திருக்கின்றது. அதுவும், மூன்று ஆண்டுகள் முழுமையாக ஆவதற்குள் அதனால் 1 லட்சம் உற்பத்தியை எட்ட முடிந்திருக்கின்றது. இப்போதும் இந்த காரின் ஒரு சில வேரியண்டிற்கு இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









