சென்னையில் இருந்து நிறைய கார்களை வெளிநாட்டுக்கு அனுப்புறீங்க... ஜப்பான் கார் நிறுவனத்துக்கு புதிய விருது!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை சென்னை வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிறப்பாக செயல்படுவதாக முன்னணி ஜப்பானிய கார் நிறுவனத்திற்கு சென்னை முதன்மை சுங்கவரி துறை ஆணையர் விருது அளித்துள்ளார். எந்த ஜப்பானிய கார் நிறுவனம் அது? சென்னையில் உருவாக்கப்படும் எந்தெந்த நாடுகளுக்கு அனுப்புகிறது? என்பது போன்ற வினாக்களுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
தென்னாசியாவில் பிரபலமான மற்றும் பழமையான துறைமுகங்கள் என்று பார்த்தால், அதில் நமது சென்னை துறைமுகமும் ஒன்றாக இருக்கும். இத்தகைய துறைமுகத்திற்கு அருகே சென்னை சுங்கவரி துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ஒப்புதல் அளித்த பின்னரே எந்தவொரு பொருளையும் சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல முடியும்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களிலும் சில கார்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றாலும், அவை மிக மிக குறைவே. வேண்டுமாயின், வெளிநாடுகளில் இருந்து மிகுந்த விலைமிக்க கார்கள் விமானம் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்படலாம். ஆகையால், சென்னை மற்றும் சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் கார்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வழியாகவே அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு கார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எப்போதும் சிறப்பாக செயல்படுவதாக நிஸான் நிறுவனத்திற்கு சென்னை சுங்கவரி துறை விருது அளித்துள்ளது. சென்னை சுங்கவரி துறையின் முதன்மை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் இந்த விருதை நிஸான் இந்தியா நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். "Make in India, Make for the World" (இந்தியாவில் உருவாக்கு, உலகத்திற்காக உருவாக்கு) என்ற நிஸான் இந்தியா நிறுவனத்தின் அயராத பணியை ஹைலைட்டாக சுட்டிக்காட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கருத்து தெரிவிக்கையில், "இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது. இது இந்திய சந்தை மற்றும் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சிக்கான எங்களது வலுவான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்' தத்துவத்தில் பிறந்த நிஸான் மேக்னைட், உண்மையான உலகளாவிய வெற்றி ஆகும்.
மேலும் அதனுடன் எங்கள் வெளிநாட்டு தடயத்தை விரிவுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார். ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதுபோல், ஜப்பான் கார் பிராண்டான நிஸானுக்கு இந்தியாவில் மேக்னைட் கார் 2வது இன்னிங்ஸை துவங்கி வைத்திருப்பது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் காராகவும் விளங்குகிறது. ஆனால் உண்மையில், நிஸான் நிறுவனம் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் கார் சன்னி (Sunny) ஆகும்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் காராக நிஸான் சன்னி பல மாதங்களில் முதலிடம் வகித்து வந்துள்ளது. ஆனால் இத்தகைய நிஸான் கார் நமது நாட்டில் விற்பனையில் இல்லை. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் எண்ணிக்கையில் கடந்த ஜூலையில் 10 இலட்சத்தை கடந்த நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் நம் நாட்டில் இருந்து மொத்தம் 15 நாடுகளுக்கு கார்களை அனுப்பி வைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
நிஸான் மட்டுமின்றி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நமது இந்தியாவை உற்பத்தி மையமாக பயன்படுத்தி வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வது பொருளாதாரத்தில் வளரும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் செலவு குறைந்ததாக உள்ளது. அதேபோல், நிஸான் மட்டுமின்றி, ஹூண்டாய், ஃபோர்டு போன்ற பிரபலமான நிறுவனங்களுக்கும் நமது சென்னை சிறந்த வாகன உற்பத்தி & ஏற்றுமதி மையமாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








