இந்த வேர்ல்டு கப்புக்கு கிரவுண்டில் இந்த காரை பார்க்கலாம்!! அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு இந்த காரில்?
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்தும், நிஸான் சார்பில் கிரிக்கெட் மைதானத்தில் நிறுத்தப்பட உள்ள கார் குறித்தும் இனி விரிவாக பார்க்கலாம்.
உலகமே தற்சமயம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுள் ஒன்று, 2023 உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகும். வருகிற 2023 அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதன் காரணமாகவே, 2011இல் உலக கோப்பையை வென்றது போல், இந்த 2023 தொடரிலும் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை தன்வசப்படுத்தும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2023 உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக மைதானங்களை தயார் செய்வது, கிரிக்கெட் அணிகளுக்கான இருப்பிட வசதியை ஏற்படுத்துவது மற்றும் டிக்கெட்களை விற்பது என ஒருபக்கம் முன்கள பணிகள் வேகம் எடுத்துவரும் நிலையில், மறுப்பக்கம் இந்த கிரிக்கெட் தொடரை சார்ந்த வணிகங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில், நிஸான் நிறுவனம் 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலமாக தொடர்ந்து 8வது வருடமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. விரைவில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ காராக நிஸான் மேக்னைட் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காகவே, நிஸான் நிறுவனம் அதன் மேக்னைட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரில் குரோ (KURO) என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்கிறது.
அதாவது, புதிய நிஸான் மேக்னைட் குரோ எடிசன் கார் தான் 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகளின் போது மைதானங்களில் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு, உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலமாக தனது பிராண்ட்டையும், தனது பிராண்ட் கார்களையும் விளம்பரப்படுத்திக் கொள்ள உள்ள நிஸான் நிறுவனம், அதேபோன்று இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரையும் நாடு முழுவதும் விளம்பரப்படுத்த உள்ளது.

இதன்படி, உலக கோப்பையை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்றுள்ள நிஸான் நிறுவனம், அதேபோல் பெரிய மால்களில் உலக கோப்பை போன்றதான 3டி கோப்பை காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தொடர்ந்து ஆர்வமாக வைத்திருக்கும் என நிஸான் நம்புகிறது. உலக கோப்பை உடன் நிஸான் மேக்னைட் கார் ஒன்றும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இந்த காருடன் செல்ஃபி எடுத்து நிஸான் நிறுவனத்திடம் பகிரும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கிரிக்கெட் போட்டியை காண்பதற்கான டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தாவா பேசியதாவது, "நிஸான் அனைத்து ஐசிசி போட்டிகளிலும் அதிகாரப்பூர்வ கூட்டணி நிறுவனமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
மேலும், ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023இன் அதிகாரப்பூர்வ காராக பெரிய, போல்ட்டான, அழகான நிஸான் மேக்னைட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. 8ஆம் வருட கூட்டணியை நினைவுக்கூரும் விதமாக நிஸான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்துவது நிஸானுக்கு பெருமைக்குரிய தருணம் ஆகும். கிரிக்கெட்டை திருவிழாவாக கொண்டாடும் இந்தியாவில் இந்த கிரிக்கெட் தொடருக்காக மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தின் பேரில் நிஸான் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுப்படும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து 8வது வருடமாக ஐசிசி உடன் கூட்டணியில் இருக்கிறது என்றால், நிச்சயமாக நிஸான் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு கிரிக்கெட் பிடித்த விளையாட்டாக இருக்க வேண்டும். இந்தியாவில் கிரிக்கெட் மிக பிரபலமான விளையாட்டு போட்டி. அத்தகைய போட்டியில் மிக முக்கியமான தொடர் நடைபெறவுள்ளதை நிஸான் நன்கு பயன்படுத்திக் கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications








