தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த விசித்திரமான நிஸான் கார்!! ஒரேயொரு படம் மட்டும் இணையத்தில் லீக்!
வெளிநாட்டில் விற்பனையில் உள்ள புதுமையான நிஸான் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் இந்தியாவில், அதுவும் நம் தமிழ்நாட்டில் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. அந்த படத்தின் மூலம் இந்த காரை பற்றி நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜப்பான் வாகனங்களுக்கு எப்போதுமே நம் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுஸுகி, டொயோட்டா என சில ஜப்பான் கார் நிறுவனங்கள், அந்த வரவேற்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால், மற்றொரு ஜப்பானிய கார் நிறுவனமான நிஸானுக்கு இந்திய மார்க்கெட்டில் ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னைட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் மூலமாக மீண்டும் 2வது இன்னிங்க்ஸை துவங்கும் முனைப்பில் நிஸான் இருந்தாலும், மேக்னைட்டிற்கு பிறகு நிஸானுக்கு இந்தியாவில் எந்த காரும் சரியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே, இந்தியாவில் ஒரேயொரு மாடலாக மேக்னைட் காரை மட்டுமே நிஸான் தற்சமயம் விற்பனை செய்து வருகிறது.
இருந்தாலும், முயற்சியை கைவிடாத நிஸான் நிறுவனம் அடுத்தடுத்து தனது புதிய கார்களை களமிறக்குவதில் தீவிரமாக உள்ளது. அவ்வாறு நிஸானின் ஐடியாவில் உள்ள கார்களுள் ஒன்று, எக்ஸ்-டிரைல் (X-Trail) ஆகும். இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த கார் சமீபத்தில் நம் தமிழ்நாட்டில் சாலை ஒன்றில் சிவப்பு நிற நம்பர் பிளேட் உடன் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, இவ்வாறு சோதனை செய்யப்படும் கார்கள் யாராலும் அடையாளம் காண முடியாத வகையில், முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த நிஸான் எக்ஸ்-டிரைல் கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் சோதிக்கப்பட்டு உள்ளது. தற்போது எந்தவொரு மறைப்புமின்றி சோதனை செய்யப்பட்டுள்ள நிஸான் எக்ஸ்-டிரைல் கார் கிரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் பின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான படத்தில் எக்ஸ்-டிரைல் காரின் பின்பக்கத்தில் ரூஃப் ஸ்பாய்லர், பருத்த சில்வர் ஸ்கிட் தட்டு மற்றும் பெரிய அளவில் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை காண முடிகிறது. நிஸான் எக்ஸ்-டிரைல் எஸ்யூவி கார் இந்தியாவில் இந்த 2023ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இப்போதுவரையில் இந்த நிஸான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. நிஸானின் மிட்-சைஸ் எஸ்யூவி காரான எக்ஸ்-டிரைலின் 4ஆம் ஜென்ரேஷன் மாடல் தற்போது இந்தியாவில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்-டிரைல் காரை கடந்த 2022ஆம் ஆண்டில் நிஸான் நிறுவனம் பொது பார்வைக்கு காட்சிப்படுத்தியது.
இதன் காரணமாகவே நிஸான் எக்ஸ்-டிரைலின் இந்திய அறிமுகத்தை இந்த 2023இல் எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிஸான் மிட்-சைஸ் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைப்ரீட் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த ஹைப்ரீட் என்ஜின் உடன் தான் எக்ஸ்-டிரைல் கார் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட உள்ளதை ஏற்கனவே நிஸான் உறுதிப்படுத்தி விட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் எக்ஸ்-டிரைல் கார் ஒன்று இந்தியாவில் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஆனால், எந்தவொரு மறைப்புமின்றி சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதனால், இதுதான் இந்தியாவில் இந்த நிஸான் காரின் கடைசி சோதனை ஓட்டமாக கூட இருக்கலாம். இதில் இருந்து, இந்த கார் அறிமுகத்திற்கு வேகமாக தயாராகி வருவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









