2024 கியா சொனெட்-க்கு வெயிட் பண்ணுவது வொர்த் தானா? பழைய சொனெட் கம்மியான விலையில் கிடைக்குது!!
கியா (Kia) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை சமீபத்தில் இந்தியாவில் வெளியீடு செய்தது. இதனை தொடர்ந்து 2024 சொனெட் கார் வருகிற ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய கியா சொனெட் காருக்கு போட்டியளிக்க மற்ற சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தயாராக உள்ளன.
குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் முக்கிய போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. தற்சமயம் விற்பனையில் உள்ள பழைய சொனெட் காருடன் ஒப்பிடுகையில், புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் பல்வேறு அம்சங்களில் மேம்பட்டதாக உள்ளது. இருப்பினும், சில விஷயங்கள் அப்படியே தொடரப்பட்டுள்ளன. தற்போதைய சொனெட் காருடன் ஒப்பிடுகையில், புதிய சொனெட் கார் எந்த அளவிற்கு சிறப்பானது என்பதை இனி பார்க்கலாம்.

வெளிப்பக்க தோற்றம்: ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றாலே காரின் முன்பக்கம் முற்றிலுமாக திருத்தப்படுவது வழக்கம். அதேபோல், 2024 சொனெட் காரின் முன்பக்கத்திலும் கூர்மையான வடிவில் 3-துண்டுகளாக எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் புலிப்பல் டிசைனில் எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்டவற்றுடன் கியா நிறுவனம் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
முன்பக்க க்ரில் பகுதியில் சில்வர் நிற இன்செர்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், முன்பக்க பம்பர் மற்றும் ஏர் டேமின் வடிவமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. காரின் சைடில் புதிய டிசைனிலான 16-இன்ச் அலாய் சக்கரங்களை தவிர்த்து பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் வகையில் லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

உட்பக்க தோற்றம் & வசதிகள்: புதிய சொனெட் காரின் உட்பக்க கேபினின் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. முக்கிய வித்தியாசம் என்று பார்த்தால், டச் ஸ்க்ரீனுக்கு கீழ் புதிய க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிய 360-டிகிரி கேமரா 2024 சொனெட்டில் வழங்கப்பட்டுள்ளது.
செல்டோஸ் காரில் வழங்கப்படும் அளவில்-பெரியதான 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை புதிய சொனெட்டில் கியா வழங்கியுள்ளது. 2024 சொனெட்டின் மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், 4-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

என்ஜின் & கியர்பாக்ஸ்: 2024 கியா சொனெட் காரில் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, புதிய சொனெட் காரும் 1.2 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதுவே, 1 லிட்டர் டர்போ என்ஜின் ஆப்ஷன் உடன் 6-ஸ்பீடு ஐ.எம்.டி, 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஐஎம்டி, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன. இதில் டீசல்- மேனுவல் ஆப்ஷன் ஆனது இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் சொனெட்டில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சொனெட் காரின் அறிமுகம் வரையில் காத்திருப்பதா அல்லது தற்சமயம் கிடைக்கக்கூடிய சொனெட் காரை வாங்குவதா என உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். மற்றவர்களின் சொனெட் கார்களில் இருந்து உங்களது சொனெட் காரை புத்துணர்ச்சியான தோற்றத்தில் பெற விரும்புகிறீர்கள் எனில், புது சொனெட்டிற்கு காத்திருக்கலாம். புதிய சொனெட் காரின் விலையை கியா சற்று அதிகமாக நிர்ணயிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications









