இப்போது இருக்குற மாருதி கார் கூட இந்த கண்டிஷனில் இருக்காது!! 17 வருஷம் பழைய கார்னு சொன்னால் நம்பவே முடியல!
17 வருடங்கள் பழமையான மாருதி ஆல்டோ (Maruti Alto) கார் ஒன்று பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கே உண்டான பிரத்யேகமான நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ் மாருதி ஆல்டோ கார் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் மூலம் கிடைத்துள்ள கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உரிமையாளர் ஒருவர் தனது காரில் அதிகப்பட்சமாக செய்துக் கொள்ளக்கூடிய மாடிஃபிகேஷன் என்று பார்த்தால், காரின் தோற்றத்தை பெயிண்ட் மூலமாகவும், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் மூலமாகவும் மெருக்கேற்றிக் கொள்ளலாம்.

இதில் சக்கரங்களின் டிசைனை மாற்றுவதற்கும், அதே அளவிலான சக்கரங்களை பொருத்த வேண்டும் மற்றும் கார் உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்த அளவில் டயர்களை பொருத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதனாலேயே முடிந்தவரையில், பிரத்யேகமான நிறத்திலான பெயிண்ட்டில் தங்களது கார்களை பலர் அலங்கரித்துக் கொள்கின்றனர்.
இந்த வரிசையில், இங்கு ஒருவர் தனது 17 வருட பழமையான மாருதி சுஸுகி ஆல்டோ ஹேட்ச்பேக் காரை பிரத்யேகமான ஸ்போர்டி நீல நிறத்தில் பெயிண்ட் செய்துக் கொண்டுள்ளார். எவரொருவரையும் கவரக்கூடிய இந்த நீல நிறத்தை ஸ்னாப்பர் ராக்ஸ் நீலம் என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கடற்கரை பகுதியில் தென்படும் பாறை ஒன்றின் நிறம் இது என்பதால், அந்த பாறைக்கு சூட்டப்பட்ட ஸ்னாப்பர் ராக்ஸ் பெயரை இந்த நீல நிறத்திற்கும் சூட்டியுள்ளனர்.

இந்த நீல நிறத்தை பெரும்பாலும் பிஎம்டபிள்யூ கார்களில் மட்டுமே காண முடியும். இந்த ஸ்னாப்பர் ராக்ஸ் நீல நிறம் ஆனது மெட்டாலிக் ஷேடில் இந்த கஸ்டமைஸ் ஆல்டோ காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்டோ கார் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம், இந்த கார் ரீ-ஸ்டோர், அதாவது பட்டி, டிங்கரிங் பார்ப்பதற்காக ஒரு மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டுச் செல்லப்பட்டதை அறிய முடிகிறது.
இந்த ஆல்டோ காரை தற்போது வைத்திருப்பவரின் தந்தை இதனை அவரது முதல் காராக வாங்கியுள்ளார். இதனால்தான், இறந்த தனது தந்தையின் நினைவாக இந்த ஆல்டோ காரை 17 வருடங்கள் ஆன போதிலும் இந்த நபர் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். மெக்கானிக் ஷாப்பிற்கு ரீ-ஸ்டோருக்காக கொண்டுவந்த போது இவ்வாறான ஒரு பெயிண்ட்டை காருக்கு வழங்க வேண்டும் என்பதெல்லாம் இவரது திட்டமாக இல்லை.

காரின் வெளிப்பக்கத்தில் இருந்த கீறல்களையும், துருப்பிடித்த பகுதிகளையும் பட்டி, டிங்கரிங் பார்த்து புது பெயிண்ட்டை வழங்க வேண்டும் என்பதும், காருக்கு உள்ளே தேவைப்பட்டால் சில மாற்றங்களை செய்துக் கொள்ளலாம் என்பதும் தான் இந்த ஆல்டோ கார் உரிமையாளரின் நோக்கமாக ஆரம்பத்தில் இருந்துள்ளது.
மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டுவருவதற்கு முன்னரும் இந்த ஆல்டோ கார் நீல நிறத்தில் பெயிண்ட்டை கொண்டிருந்தது. லம்போர்கினி உருஸ் காரின் நீல நிற பெயிண்ட்டை தனது காருக்கு வழங்க முடியுமா என மெக்கானிக்கிடம் இவர் கேட்க, அவர்கள் இவ்வாறான ஒரு கலரில் பெயிண்ட் இருப்பதாக கூறி அதனை காருக்கு அடித்துள்ளனர். பெயிண்ட் அடிப்பதற்கு முன்னதாக, துருப்பிடித்த பகுதிகளை கண்டறிய காரின் பேனல்கள் முழுவதுமாக கழற்றப்பட்டு, பின்னர் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ கார்களில் மட்டுமே இத்தகைய ஸ்னாப்பர் ராக்ஸ் நீல நிறத்தை பார்க்க முடியும் என்றாலும், இந்த நிறத்தில் பிஎம்டபிள்யூ கார்களை சாலையில் காண்பதும் அரிதானதே. ஆதலால், இந்த மாருதி ஆல்டோ கார் சாலையில் சென்றாலே அனைவரது கவனமும் இதன் மீதுதான் இருக்கும். 17 வருடங்களுக்கு முன்னர் ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுக்கும்போது கூட இந்த கார் இவ்வாறான ஒரு பெயிண்ட்டை கொண்டு இருந்திருக்காது.


Click it and Unblock the Notifications









