மாருதி கார்களுக்கு மட்டும் எங்கிருந்துங்க இவ்வளவு கஸ்டமர்ஸ் கிடைக்கிறாங்க!! 2022இல் விற்பனையானவை மட்டும்...
2020இல் துவங்கிய கொரோனா வைரஸ் பரவல் நம்மை 2 ஆண்டுகளாய் பாடாய் படுத்திவிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்துதான் நிலைமை ஓரளவிற்கு சீராகியது. இதனால் கடந்த ஆண்டில் தான் கார்கள் விற்பனை ஓரளவிற்கு நல்லப்படியாக இருந்துள்ளது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2022இல் 7 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2021ஐ காட்டிலும் கடந்த 2022இல் ரெனால்ட், நிஸான் நிறுவனங்களை தவிர்த்து மற்றவை அனைத்தும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துள்ளன. கடந்த 2022இல் மொத்தமாக நம் நாட்டில் 37,80,870 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் வழக்கம்போல் மாருதி சுஸுகியின் பங்கு தான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கையில் மாருதி சுஸுகியின் கார்கள் மட்டும் 41.68% அடங்குகின்றன.

கடந்த பல வருடங்களாக இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த ஆண்டில் மொத்தமாக 15,76,025 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2021இல் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 15.48% அதிகம் ஆகும். ஏனெனில் அந்த ஆண்டில் 13,64,787 கார்களையே இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கார்களை மாருதியால் விற்பனை செய்ய முடிந்ததற்கு 2022இல் இந்த நிறுவனம் மேற்கொண்ட தொடர் அப்டேகளே காரணம் ஆகும்.

ஆம், 2022இல் சில கார்களை அப்டேட் செய்தும், சில கார்களை முற்றிலும் புதியவைகளாகவும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு மாற்றாக புத்தம் புதிய பிரெஸ்ஸா சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் மற்றும் கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை சொல்லலாம். மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் தென்கொரிய கார் பிராண்டான ஹூண்டாய் உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் கார்களை விற்பனை செய்வது யார் என்பதில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சமீப மாதங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது.
ஆனால் 2022இன் முதல் பாதியில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்தததினால் இந்த வரிசையில் ஹூண்டாய் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக விற்பனையான ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 5,52,511 ஆகும். அதுவே 2021இல் 5,05,033 கார்களை மட்டுமே ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், ஹூண்டாய் கார்களின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் பெரியதாக வளர்ச்சி காணவில்லை என்றாலும், கணிசமாக 9.40% வளர்ச்சி கண்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், ஹூண்டாயை மிக நெருக்கமாக நெருங்கியவாறு டாடா மோட்டார்ஸ் 3வது இடத்தில் உள்ளது. 2022இல் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் எண்ணிக்கை 5,26,798 ஆகும். அதாவது, கடந்த ஆண்டு விற்பனையில் ஹூண்டாயிற்கும், டாடாவிற்கும் இடையே வெறும் 25,000 யூனிட் கார்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. அதேபோல் 2021 உடன் ஒப்பிடுகையிலும் டாடா நிறுவனம் கார்கள் விற்பனையில் பெரிய அளவில் 59.07% வளர்ச்சியை கண்டுள்ளது.
ஏனெனில் 2021இல் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 3,31,181 மட்டுமே ஆகும். இவற்றை தொடர்ந்து மஹிந்திரா 4வது இடத்தை 3,35,088 கார்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. இந்த இந்திய கார் தயாரிப்பு நிறுவனமும் கடந்த ஆண்டு கார்கள் விற்பனையில் பலரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையிலான முன்னேற்றத்தை பெற்றுள்ளது. ஏனென்றால் 2021இல் விற்கப்பட்ட மஹிந்திரா கார்கள் எண்ணிக்கையும் 2 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது.
இதில் இருந்து இந்திய வாடிக்கையாளர்கள் இந்திய தயாரிப்பு வாகனங்களின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. அதுவுமில்லாமல் 2021இல் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளும் அந்த ஆண்டில் கார்கள் விற்பனை கணிசமாக குறைந்து இருந்ததற்கு முக்கிய காரணமாகும். மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவை தொடர்ந்து இந்தியாவின் டாப்-5 கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக கியா மோட்டார்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications








