அதிக கட்டண வசூலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி.. இப்படி ஒரு பாடம் புகட்டுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
சுங்கச் சாவடிகளில் அரங்கேறும் முறைகேடுகளைத் தவிர்க்கும் விதமாகவும், கட்டணம் செலுத்த ஆகும் அதிக நேரத்தை குறைக்கும் விதமாகவும் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றே ஃபாஸ்டேக் (FASTag). சிறிய துண்டு காகிதம் போல் அது வாகனங்களின் முன்பக்க விண்ட்ஷீல்டுகளில் ஒட்டப்பட்டு இருக்கும்.
டோல்கேட்டுக்கான கட்டணத்தை தானாக செலுத்த இந்த காகிதத் துண்டே உதவுகின்றது. ரேடியோ அதிர்வெண் வாயிலாக இது செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஃபாஸ்டேக் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் டோல்கேட்டுகளில் எந்தவிதமான முறைகேடும் ஏற்படாது, அதற்கு ஃபாஸ்டேக் எந்தவகையிலும் அனுமதிக்காது என அரசால் குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், இந்த ஃபாஸ்டேக் வாயிலாகவும் அவ்வப்போது முறைகேடுகள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஓர் அதிர்ச்சியளிக்கும் முறைகேடு சம்பவம் நமது அண்டை மாநிலத்தில் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஃபாஸ்டேக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட அந்த டோல்கேட் ஏஜென்சிக்கு அதிரடியாக உச்சபட்ச அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் சித்ரதுர்கா லிமிட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்திருக்கின்றார். இந்த பயணத்தின்போது டோலுக்கான கட்டணத்தை ஃபாஸ்டேக் வாயிலாக அவர் செலுத்தி இருக்கின்றார்.

ஒவ்வொரு முறையும் ரூ. 40 வீதம் ஃபாஸ்டேக் அக்கவுண்டில் இருந்து கழிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அந்த டோலுக்கு அவரிடம் இருந்து ரூ. 35 மட்டுமே வசூல் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக இரண்டு முறை கூடுதலாக ரூ. 5 கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருக்கின்றது.
தன்னுடைய ஃபாஸ்டேக் அக்கவுண்டை சரிபார்த்தபோதே சந்தோஷுக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதனால் அதிர்ச்சியுற்ற அவர் ஐந்து ரூபாயை கூடுதலாக வசூல் செய்த டோல்பிளாசா பற்றிய புகாரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகாராக முன் வைத்தார். ஆணையத்தின் முக்கிய அதிகாரிகளையும் இதுகுறித்து அவர் நாடி இருக்கின்றார்.
ஆனால், புராஜெக்ட் மேனேஜர் மற்றும் ஆணையத்தின் முக்கிய அதிகாரி என இருவரும் உரிய விளக்கம் அளிக்க தவிறி விட்டனர். மேலும், 35 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டி டோல்கேட்டில் அதிகமாக வசூல் செய்யப்படும் கட்டணத்தைக் குறைக்கவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு சந்தோஷ்குமார் ஆளாகினார்.
குறிப்பாக, பலருடைய உழைப்பு வீண்போகக் கூடாது என்கிற எண்ணத்தில் அவர், நாக்பூரில் உள்ள ஜாஸ் டோல் ரோட் கம்பெனி நிறுவனத்தின்மீதும், சித்ரதுர்காவைச் சேர்ந்த நெடுஞ்சாலை ஆணையத்தின் புராஜெக்ட் டைரக்டர் மீதும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். தன்னுடைய இந்த வழக்கை சந்தோஷ்குமாரே கையில் எடுத்து வாதிடவும் செய்தார்.
இந்த நிலையிலேயே அவர் தன்னுடைய வழக்கில் வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம், சந்தோஷ் குமார் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து அவரிடம் இருந்து கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூ. 10ஐ திரும்பி வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், நஷ்ட ஈடாக ரூ. 8 ஆயிரத்தையும் சந்தோஷ் குமாருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், உரிய கட்டணத்தை மட்டுமே வசூலிக்கும்படி சிஸ்டத்தில் மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இதேபோல், அதிக கட்டண வசூலில் ஈடுபடும் அனைத்து டோல் பிளாசக்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கைகள் எழும்பி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டோல்பிளாசாக்களில் நிலவும் அதிக வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டே ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும் பல சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் மிகுந்துக் காணப்படுகின்றது. அதேவேளையில் முறைகேடுகளும் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









