மணிக்கு 358 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த மஹிந்திரா தயாரிப்பு! இந்தியால இந்தளவு வேகத்த வேறஎந்த காரும் தொட்டதில்ல
இத்தாலியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பினின்ஃபரீனா (Pininfarina). இது இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா (Mahindra)-விற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. பினின்ஃபரீனா அண்மையில் உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை உருவாக்கியது.
இந்த வாகனத்தையே இந்தியாவின் நட்ராக்ஸ் (National Automotive Test Tracks) சோதனை ஓட்டம் செய்யும் டிராக்கில் வைத்து அண்மையில் ஆய்விற்கு உட்படுத்தினர். அதிக வேகத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், பட்டிஸ்டா அதன் உச்சபட்ச வேகத்தை எட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.

எலெக்ட்ரிக் கார் பட்டிஸ்டா, கால் மைலை 8.55 செகண்டுகளிலும், அரை மைலை 13.38 செகண்டுகளிலும் கடந்து சாதனைப் படைத்தது. விபாக்ஸ் வாயிலாகவே இது கண்டறியப்பட்டது. இந்த சோதனையின்போது பட்டிஸ்டா மணிக்கு 358.03 கிமீ வேகத்தில் பயணித்து இருக்கின்றது. இந்த அளவு வேகத்தில் வேறு எந்த வாகனமும் பயணிக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோலில் ஓடும் கார்கள்கூட இந்த வேகத்தை எட்டுவது சந்தேகமே.
ஆகையால், பினின்ஃபரீனா பட்டிஸ்டா செய்திருக்கும் இந்த சாதனை உலக சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தில் மிஷ்லின் பைலட் ஸ்போர்ட் கப் (Michelin Pilot Sport Cup) டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுவும் பட்டிஸ்டா எலெக்ட்ரிக் காரின் அதீத வேகத்திற்கு ஓர் காரணமாக இருக்கின்றது.

332 கிமீ வேகமே இந்தியாவில் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச வேகமாக இருந்தது. இதனை பட்டிஸ்டா தற்போது முறியடித்திருக்கின்றது. இந்த தகவல் எஃப்எம்எஸ்சிஐ (Federation of Motor Sports Clubs of India) வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. பட்டிஸ்டாவில் நான்கு மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலகாவே நான்கு வீலுக்கும் இயங்கும் திறன் கடத்தப்படுகின்றது.
1,400 kW (1877 பிஎச்பி) மற்றும் 2,340 என்எம் டார்க்கை அவை வெளியேற்றின. இத்தாலியைச் சேர்ந்த பினின்ஃபரீனாவின் எஞ்ஜினியர்கள் சிலர் இந்த மோட்டாரை சில கடுமையான ட்யூன்-அப்பிற்கு உட்படுத்தியதன் வாயிலாகவே இந்த அளவு ரேஞ்ஜை அதனால் வழங்க முடிந்திருக்கின்றது. பினின்ஃபரீனா பட்டிஸ்டா அதிக வேகத்தில் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் கார் மட்டுமில்லைங்க, அது, அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாகவும் காட்சியளிக்கின்றது.

இந்த வாகனம் வெறும் 1.86 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதுமட்டுமில்லைங்க 4.75 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் அது கொண்டிருக்கின்றது. இந்த திறன் ஃபார்முலா 1 ரேஸ் கார்களையே தோற்கடிக்கும் வேகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எலெக்ட்ரிக் காரில் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, பட்டிஸ்டாவின் அதீத வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த கருவி 31 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வரும் காரைகூட பூஜ்ஜியம் வேகத்திற்குக் கொண்டு வந்துவிடும்.
இந்த அளவு திறன் கொண்ட பிரேக்கிங் சிஸ்டமே பட்டிஸ்டாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகளை வெகு விரைவில் தொடங்க இருப்பதாக பினின்ஃபரினாவின் சிஇஓ பவுலோ டெல்லச்சா கூறி இருக்கின்றார். பட்டிஸ்டாவின் அதி-வேக சாதனை பற்றி பகிர்ந்துக் கொண்டபோதே இந்த தகவலையும் அவர் உறுதிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications









