இந்தியர்கள் இந்த காருக்காக தவமே இருக்கலாம்! 2024வர காத்திருக்க மாட்டோமா! இந்த இ-காரின் உற்பத்தி தொடங்கிருச்சா!
ஒரு சில காருக்காக வருஷக் கணக்கில்கூட காத்திருக்கலாம். அந்த மாதிரியான ஓர் கார் மாடலின் உற்பத்தியையே பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் ஐ5 எனும் ஆடம்பர காரின் உற்பத்தி பணிகளையே தொடங்கி இருக்கின்றது.
அது ஓர் எலெக்ட்ரிக் காராகும். "வெயிட், வெயிட்... என்ன கொழப்புறீங்க?.. அதான் காரின் உற்பத்தி பணிகளே தொடங்கியாச்சே இந்த காருக்காக ஏன் வருஷக் கணக்குல காத்திருக்கணும்" அப்படினு நீங்க கேட்கலாம். இதற்கான பதில் இதோ, இப்போது பிஎம்டபிள்யூ ஐ5 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கி இருப்பது ஜெர்மனி நாட்டிலே ஆகும்.

இதன் இந்திய வருகை 2024 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரங்கேறும் என கூறப்படுகின்றது. எனவே இந்தியர்கள் இந்த காரை கைகளில் பெற இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்கிற சூழலே தற்போது தென்படுகின்றது. இப்போது புரிகிறதா ஏன் நாங்கள் அவ்வாறு கூறினோம் என்று.
சரி இந்த காருக்காக ஏன் காத்திருக்க வேண்டும்?, அப்படி என்ன சிறப்புகள் அந்த காரில் இருக்கின்றன என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம்?, இதற்கான பதிலையும் பின்வருமாறு பார்க்கலாம். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 சீரிஸ் சொகுசு காரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகின்றோம்.

உலக செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது இருக்கின்றது. இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த செடான் ரக காராகும். இதன் ப்யூர் மின்சார வெர்ஷனே ஐ5 ஆகும். ஆகையால், இந்த வாகனத்திற்கு உலக அளவில் எதிர்பார்ப்பு மிக அதிகம்.
சொகுசு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ரேஞ்ஜ் திறன் என அனைத்திலும் மிக சிறந்த தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்த காருக்காக தவம் இருந்தாலும் தப்பில்லை என கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஐ4 மற்றும் ஐ7 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு இடைப்பட்ட இடத்திலேயே பிஎம்டபிள்யூ நிலை நிறுத்த இருக்கின்றது.
இதன் ரேஞ்ஜ் திறன் 475 கிமீட்டராக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஓர் ஃபுல் சார்ஜிலேயே இந்த அளவு அதிகபட்ச ரேஞ்ஜ் திறனை ஐ5 எலெக்ட்ரிக் செடான் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த திறனுடன் சேர்த்து மிக அதீத, அதாவது, ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான திறனை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
335 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய இடிரைவ்40 சிஸ்டமே ஐ5 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால், வெறும் 5.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 96 கிமீ எனும் வேகத்தை எட்ட முடியும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேக திறனே ஐ5 எலெக்ட்ரிக் காரை ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான திறனை வெளியேற்றேக் கூடிய வாகனமாகக் காட்சியளிக்கச் செய்கின்றது.
இத்தகைய சூப்பரான இ-காரின் உற்பத்தியையே பிஎம்டபிள்யூ ஜெர்மனியில் தொடங்கி இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவிலும் இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவிலும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெகு சமீபத்தில் வெளியாகிய தகவல்கள், சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 9 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கிடைத்தவை ஆகும். இந்த நிலையிலேயே தன்னுடை இ-வாகன உற்பத்தியை இந்தியாவில் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், ஐ5 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளும் நம் நாட்டில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
தற்போது நிறுவனத்தின் மின்சார கார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதனால் அவற்றின் விலை மிக மிக அதிகமாக தென்படுகின்றது. இவற்றின் விற்பனை உள்ளூர் மயமாக்கப்படும் எனில் சற்று குறைவான விலையில் பிஎம்டபிள்யூவின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைப்பதற்கான சூழல் உருவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக பிஎம்டபிள்யூவின் அனைத்து தயாரிப்புகளுக்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியையும் இந்தியாவிலேயே மேற்கொள்ளும் முயற்சியில் பிஎம்டபிள்யூ களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








