ஹூண்டாய், மாருதி கார்களை ஓட்டி போரடிச்சு போச்சா! மலேசியா நிறுவனத்தின் கார் இந்தியா வர போகுது!
வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தை இந்தியா என்பதால், நாட்டில் கால் தடம் பதிக்க புதுமுக நிறுவனங்கள் பல வரிசைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபிஸ்கர், அதன் இந்திய வருகையை சமீபத்தில் உறுதி செய்தது.
இன்னும் ஓரிரு மாதங்களில், நிறுவனம் அதன் தயாரிப்பை இந்தியாவில் விற்பனைக்க அறிமுகம் செய்து, தன்னுடைய வருகையை பதிவு செய்யும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது இந்தியாவிற்கான அதன் முதல் தயாரிப்பாக ஓசோன் எஸ்யூவி ரக காரையே விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது.

டெஸ்லாவிற்கு போட்டியாக களத்தில் இருக்கும் நிறுவனங்களில் ஃபிஸ்கர்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றுமொரு புதுமுக நிறுவனம் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. புரோட்டான் எனும் நிறுவனமே அது ஆகும்.
இந்த நிறுவனம் அதன் எக்ஸ்50 காரை இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து அண்மையில் சோதனை ஓட்டத்தைச் செய்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ரஷ்லேன் வெளியிட்டு இருக்கும் படங்களை நீங்கள் இந்த பதிவில் பார்க்கலாம். இதை வைத்தே புரோட்டான் இந்தியா வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

புரோட்டான் நிறுவனம் அதன் கார்களை இந்திய சாலையில் வைத்து சோதனை ஓட்டம் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சென்ற 2022ஆம் ஆண்டு ஜனவரியிலும் இதேபோல் சோதனை ஓட்டத்தை அந்நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் கார்கள் சோதனை ஓட்டப் பணியை புரோட்டான் கையில் எடுத்து இருக்கின்றது.
ஆகையால், விரைவில் நிறுவனத்தின் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். புரோட்டான் எக்ஸ்50 ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த ரக கார்களுக்கு இந்தியாவில் செம டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு மிக சிறந்த சான்றாக செல்டோஸ் மற்றும் கிரெட்டா ஆகிய கார் மாடல்கள் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவை அதகளப்படுத்தும் விதமாக புதிய புரோட்டான் எக்ஸ்50 இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது. புரோட்டான், இது பிறப்பால் ஓர் மலேசியா நிறுவனம் ஆகும். ஆனால், சீனா நிறுவனமான கீலிக்கு சொந்தமாக அது தற்போத மாறி இருக்கின்றது. எனவே, புரோட்டான் சீன நிறுவனமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் கால் தடம் பதிக்க சீன நிறுவனம் கையாளும் யுக்தியாக இது இருக்கின்றது. அதாவது, அவை தன்னுடைய சப்சைடரி பிராண்டின் வாயிலாக இந்திய வருகையை பதிவு செய்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இங்கிலாந்து பிராண்ட் எம்ஜி வாயிலாகவும், சுவீடன் பிராண்ட் வாவ்வோ வாயிலாகவும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் கால் தடம் பதித்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியாவில் சீன தயாரிப்பு மற்றும் பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த தடை காரணத்தினாலேயே தற்போது சீன நிறுவனங்கள் தங்களின் வேற்று நாட்டு சப்சைடரி நிறுவனங்கள் வாயிலாக இந்திய வருகையை பதிவு செய்துக் கொண்டிருக்கின்றன. மலேசியாவில் இந்த கார் எக்ஸ்50 என்கிற பெயரிலும் சீனாவில் கீலியின் பின்யூ பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்படுகின்றது.
மொத்தம் நான்கு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்டு, எக்ஸிகியூட்டிவ், பிரீமியம் மற்றும் ஃபிளாக்ஷிப் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் உயர்நிலை தேர்வுகளில் 6 ஏர் பேக்குகள், அடாஸ் பாதகாப்பு அம்சம் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், ஏசியன் என்சிஏபி இடம் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் இந்த கார் பெற்றிருக்கின்றது. எஞ்ஜினைப் பொருத்த வரை 1.5 லிட்டர், 3 சிலிண்டர், இன்-லைன், 12 வால்வ் டிஓஎச்சி, டர்போசார்ஜட் மோட்டார் தேர்வு மட்டுமே புரோட்டான் எக்ஸ்50-ல் வழங்கப்படுகின்றது. ஆகையால், இந்த மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே இந்தியாவிலும் இந்த கார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக மாறி இருக்கின்றது. சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்களின்படி, 2020ஆம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக 32.63 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த எண்ணிக்கைய வரும் காலங்களில் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே புதுமுக நிறுவனங்களின் வருகையும் உள்ளது.


Click it and Unblock the Notifications









