நம் இந்திய மெக்கானிக்குகளின் திறமை நாளுக்கு நாள் வளருது... இது டிஃபெண்டர் காருனு நினைப்பீங்க, அதுதான் இல்ல!!
கம்பீரமான தோற்றம் கொண்ட லேண்ட் ரோவர் எஸ்யூவி கார்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலிலும் குறிப்பாக, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் நீண்ட வருட வரலாற்றை கொண்டவை. அந்த அளவிற்கு டிஃபெண்டர் வாகனங்களுக்கு உலகம் முழுக்க பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.
டிஃபெண்டர் கார்களின் ஒரே குறை என்னவென்றால், அவை மிகவும் உயர்த்தரத்தில் தயாரிக்கப்படுவதினால் அவற்றிற்கு நிர்ணயிக்கப்படும் அதிகப்படியான விலை ஆகும். நம் இந்தியாவை பொறுத்தவரையில், நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவராலும் டிஃபெண்டர் கார்களை வாங்க முடியாது. இதன் காரணமாக, சிலர் தங்களது காரை டிஃபெண்டர் போன்று மாற்றி கொள்ள முயற்சி செய்துள்ளதை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.

அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபலமான கார் கஸ்டமைஸ்ட் நிறுவனமான பிக் டாடி மஹிந்திரா பொலேரோ கார் ஒன்றை பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் தோற்றத்திற்கு மாற்றி உள்ளது. முக்கியமாக, பொலேரோ காரின் வழக்கமான உடல் கூடு முழுவதுமாக நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக தனியாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உடல் கூடு பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முன்பக்கத்திலும் பழைய டிஃபெண்டர் காரின் தோற்றத்தை கொண்டு வருவதற்காக புல் பார், ராக் ஸ்லைடர்ஸ் மற்றும் ரோல் கேஜ் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இவ்வளவு ஏன், முன்பக்க பொனெட் மற்றும் பின்பக்க டெயில்கேட்டை கூட பார்த்து பார்த்து கவனமாக வடிவமைத்துள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே லேண்ட் ரோவர் கார்கள் நன்கு நீளமானவை. அதற்கு ஏற்ப இந்த பொலேரோ காரின் நீளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா பொலேரோவும் நீளமானதுதான், ஆனால் டிஃபெண்டர் அளவிற்கு இல்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும். மற்றப்படி, பொலேரோவின் அடிப்படையான லேடார்-ஃப்ரேம் சேசிஸில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அது அப்படியே தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் டிஃபெண்டரில் கிடைக்கும் பயண உணர்வு இந்த மாடிஃபை பொலேரோவிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 4-இன்ச் லிஃப்ட் கிட் சஸ்பென்ஷன்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பெரும்பாலானவை கணக்கச்சிதமாக பொருந்தி இருக்க, பழைய டிஃபெண்டரில் இருந்து இந்த மாடிஃபை வாகனத்தில் சற்று வித்தியாசப்படுவை என்று பார்த்தால், ஜன்னல் கண்ணாடிகள் தான். பழைய டிஃபெண்டரில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு பார்டர் வழங்கப்பட்டிருக்கும். அதாவது அந்த காலத்தில், ஜன்னல் கண்ணாடிகளை பார்டர் இல்லாமல் தற்போதைய மாடர்ன் கார்களை போன்று வடிவமைக்கும் தொழிற்நுட்பங்களும், கருவிகளும் இல்லை.

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே மாடிஃபை செய்தவர்கள் பின்னர் தங்களது முடிவை மாற்றி கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த மாடிஃபை பொலேரோ கார் பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டரை போன்று தோற்றமளிப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, பொலிரோவின் சப்-4 மீட்டர் ஃப்ரேமில் டிஃபெண்டர் போன்றதான உடல் கூட்டை அமர வைத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது.
உட்பக்க கேபின் ஆனது டேன் லெதரேட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜினில் கை வைக்கப்படவில்லை. ஆனால் உண்மையை கூற வேண்டுமென்றால், இந்த மாடிஃபை பொலிரோ காரை எடுத்து கொண்டு போக்குவரத்து போலீஸாருக்கு முன் சென்றுவிட முடியாது. ஏனெனில் இவ்வாறான மாடிஃபிகேஷன் சட்டத்திற்கு புறம்பானவை. இந்த வாகனத்தை எவ்வளவு சிரமப்பட்டு அழகான டிஃபெண்டர் தோற்றத்திற்கு மாற்றியிருந்தாலும், அபராதம் விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications









